திமுக அரசு

“பா.ஜ.க-வுக்கு பல்லக்கு தூக்கும் அ.தி.மு.கவை தண்டிக்க வேண்டிய நேரம் இது" - ப.சிதம்பரம் பேச்சு!

“கடந்த 3 மாதங்களாக முதல்வர் அடிக்கல் மட்டுமே நாட்டி வருகிறார். எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை” என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

“பா.ஜ.க-வுக்கு பல்லக்கு தூக்கும் அ.தி.மு.கவை தண்டிக்க வேண்டிய நேரம் இது" - ப.சிதம்பரம் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“எடப்பாடி அரசு வெற்றி நடை போடும் அரசு அல்ல; வெற்றுப் பேச்சு அரசு” என குன்றத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகையை ஆதரித்து, காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் குன்றத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தமிழகத்தில் 10 ஆண்டு, டெல்லியில் 7 ஆண்டு காலம் ஒரு ஆட்சி நடைபெறுகிறது. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சி. ஜெயலலிதா ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி என ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே தெரியாது. கூவத்தூரில் கூடினார்கள், முதல்வராக வந்தார் அவர். 5 ஆண்டுகளாக என்ன செய்தனர் ஆளுங்கட்சியினர்?

தாங்கள் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் ஆளுங்கட்சி ஓட்டுக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி செய்யப்போவதை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். இந்த 5 ஆண்டில் எடப்பாடி ஆட்சி என்ன செய்தது என்று பார்த்தால் எதுவுமில்லை.

தமிழகம் உயர, கட்டமைப்பு உயர, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்தனர்? தமிழகத்துக்கு 4 லட்சத்து 85,000 கோடி கடனைத் தான் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். 66,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் 60,000 ரூபாய் கடன் சுமையை வைத்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக முதல்வர் அடிக்கல் மட்டுமே நாட்டி வருகிறார். எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை. மே 2க்குப் பிறகு நாம் ஆட்சியில் இருக்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவதால், வெறும் கல்லை மட்டுமே நாட்டி வருகிறார்.

பட்ஜெட்டில் வெறும் 5,000 கோடி தான் விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ளனர். ரூபாய் 12,100 கோடி கடன் இருக்கிறது. எஞ்சியுள்ள கடனை யார் தருவார்கள். விவசாயக்கடன் முறையாக ரத்தாக வேண்டுமென்றால் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்போகின்றனர் என்றதும் முதல்வர் அவசர அவசரமாக மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து என அறிவிக்கிறார். வெற்றி நடை போடும் அரசு அல்ல இது. வெற்றுப் பேச்சு அரசு.

தமிழகத்தின் பகை கட்சி பா.ஜ.க. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என நினைக்கும், மத பேதத்தை ஏற்படுத்தும், சனாதன தர்மத்தை மீண்டும் இந்தியாவில் புகுத்தும் கட்சி பா.ஜ.க.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, சிறுபான்மையினரை வதைத்தனர். இதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது அ.தி.மு.க தான். பா.ஜ.க-வுக்கு பல்லக்கு சுமக்கும் அ.தி.மு.கவையும் தண்டிக்க வேண்டிய நேரம் இது.

மத்திய அரசை எதிர்க்கும் மாநில அரசு தான் இங்கு வேண்டும். தி.மு.க ஆட்சி அமைந்தால்தான் இந்த இன்னல்களுக்கு முடிவு கிடைக்கும்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories