தேர்தல்2021

“அனைத்துச் சமூகத்துக்கும் நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அனைத்துச் சமூகத்துக்கும்  நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் சமூகநீதி; அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக - அனைத்துச் சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக - சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க. அரசு" எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, பாலக்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

தருமபுரி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக தடங்கம் சுப்பிரமணி அவர்கள், ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து உங்களுக்காக வாதாடியவர் போராடியவர். இந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்திருப்பவர். அதனால் தான் மீண்டும் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பென்னாகரம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அருமை சகோதரர் இன்பசேகரன் அவர்கள், மறைந்த நம்முடைய அன்பிற்குரிய பெரியண்ணன் அவர்களுடைய அருமை மகன்.

பென்னாகரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து அந்த தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை சாதனைகளை உருவாக்க காரணமாக இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக டாக்டர் பிரபு ராஜசேகர் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கி அவர்களுடைய உள்ளங்களில் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கி கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாலக்கோடு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக வழக்கறிஞர் பி.கே.முருகன் அவர்கள், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆர்வத்தோடு பணியாற்ற துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த வேட்பாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், அரூர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் அந்த மாவட்டத் தலைவர் சகோதரர் குமார் அவர்கள், பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் எல்லோரிடத்திலும் இனிமையாக பழகுபவர் - மக்களுக்காக போராடுபவர் - தொழிலாளர்களுக்காக வாதாடுபவர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சிறந்த வேட்பாளர். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் நீங்கள் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இவர்களுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கும் நானும் ஒரு வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட இந்த தருமபுரிக்கு வந்திருக்கிறேன். கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். தருமபுரிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்த இந்த ஸ்டாலின் உரிமையோடு உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

“அனைத்துச் சமூகத்துக்கும்  நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

இந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். இருக்கிறார் என்று சொன்னேனே தவிர செயல்படுகிறார் என்று சொல்லவில்லை. அவர் பெயர் கே.பி.அன்பழகன். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து நீட்டை அனுமதித்தார். அதாவது அனிதா உட்பட பல மாணவ - மாணவியர்கள் இந்த 'நீட்'டினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அதைத்தான் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.

நாம் எதிர்க்காமல் இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்திருப்பார்கள். அந்தத் துறை மீது அக்கறை இல்லாத ஒரு அமைச்சர் யார் என்றால் அது அன்பழகன்தான்.

அந்தத் துறைக்குத்தான் ஒன்றும் செய்யவில்லை என்று பார்த்தால், இந்தத் தொகுதிக்கு - இந்த மாவட்டத்திற்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது. ஆனால் அந்த திட்டம் மூலம் இப்போது தருமபுரிக்குத் தண்ணீர் வருகிறதா? தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயனடையும் என்று சொன்னார். அதைச் செய்தாரா? அலியாளம் அணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவோம் என்று சொல்லி 10 வருடம் ஆகிவிட்டது. அவ்வாறு செய்து கொடுத்திருக்கிறாரா? வத்தல் மலையைச் சுற்றுலாத்தலமாக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆணை பிறப்பித்தார்கள். ஏதாவது நடந்து இருக்கிறதா? தருமபுரி தொழிற்பேட்டை என்ன ஆனது? இளைஞர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆக்கப்பணிகளில் இதுவரையில் ஈடுபட்டிருக்கிறார்களா?

பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வாய்க்கால் மூலமாக தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வருவதாக சொன்னார். அவ்வாறு செய்தாரா?

எனவே அவர் துறையிலும் ஒன்றும் செய்யவில்லை. அவரை தேர்ந்தெடுத்த தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. இந்த மாவட்டத்திற்கும் எதுவும் செய்யவில்லை.

எதற்கும் உபயோகம் இல்லாதவரை வைத்துக் கொண்டிருக்கலாமா? அவர் மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களும் அப்படித்தான். இவர்களுக்கு தலைமை வகித்து கொண்டிருக்கும் ஒருவர் இருக்கிறார், முதலமைச்சர்.

அவருக்கு எவ்வாறு பதவி கிடைத்தது என்று சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். ஸ்டாலின் மாதிரி திடீரென்று வளர்ந்து வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

படிப்படியாக வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? தவழ்ந்து வந்தாரா? சசிகலா காலில் விழுந்தீர்களா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள். அதுவும் ஊர்ந்து சென்று விழுந்தீர்களா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்.

சமூக வலைதளங்களில் பார்த்திருந்தால் தெரியும். அவர் ஊர்ந்து வரும் போது அருகிலிருந்த திண்டுக்கல் சீனிவாசன் பதறி ஏதோ ஊர்ந்து வருகிறது என்று பயந்து எழுந்து நிற்கிறார். இதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும்.

இப்போது அவர்கள் கோடி கோடியாக செலவு செய்து, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டிருப்பதெல்லாம் என்ன?

விவசாயிகளை காப்பாற்றி விட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.

விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இது விவசாயிகளுக்கு கேவலம். எப்போது பார்த்தாலும் விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டிருக்கும், விவசாயிகளுக்கு பச்சை துரோகியாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். இதை நிச்சயம் விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.

“அனைத்துச் சமூகத்துக்கும்  நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

மத்திய ஜல்சக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஆக்கி, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பவர்தான் இந்த பச்சைத் துண்டு பழனிசாமி. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட விவசாயிகளும் இப்போது நிம்மதியாக இல்லை. குடிமராமத்து என்று சொல்லி மணல் கொள்ளையை நடத்தி போலி பில் போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த போலி விவசாயியாக நடித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியின் ஆட்சி. கரும்பு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை தி.மு.க. ஆட்சியில் கொடுத்தோம். இப்போது 137 ரூபாயாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் செய்ய லஞ்சம், அவ்வாறு செய்தாலும் முழுமையாக செய்யவில்லை.

புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீடு தர வில்லை. இது அனைத்திற்கும் மேலாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசிற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் அடிமை ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.

மீட்டரை பொருத்தி மத்திய அரசு விவசாயிகளிடம் பணம் வாங்க போகிறார்கள். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்த, வேளாண் விரோத அ.தி.மு.க. அரசை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

பத்தாண்டுகாலமாக இந்த தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கி பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊழல் செய்வது - பொய் சொல்வதுதான் இந்த ஆட்சி.

இந்த ஆட்சியின் அவலத்தை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இது பொல்லாத ஆட்சி - அதற்கு சாட்சி பொள்ளாச்சி, இது துப்புகெட்ட ஆட்சி - அதற்கு சாட்சி தூத்துக்குடி, இது சாகடிக்கும் ஆட்சி - அதற்கு சாத்தான்குளம் சாட்சி, இது அ.தி.மு.க. ஆட்சி அல்ல, இது அடிமை ஆட்சி.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று வந்திருக்கிறது. பிரபலமான பத்திரிகையாளர் இந்து ராம் அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

எனவே எத்தனை முறை பிரதமர் வந்து பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வரவேப்போவதில்லை. அதே நேரத்தில் ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அ.தி.மு.க. வேட்பாளர் வென்றால் அவர் பாஜக எம்எல்ஏ-தான்.

எனவே அந்தக் கோரிக்கையை உங்களிடத்தில் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டு காட்டி இருக்கிறோம். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் கழகத்தில் இருக்கும் முன்னணியினர் இடம்பெற்று தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து எல்லாத் தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அவர்களோடு கலந்து ஆய்வு நடத்தி, என்னென்ன திட்டங்கள் உடனடியாக தேவை? என்னென்ன திட்டங்கள் காலப்போக்கில் தேவை? அவ்வாறு தீட்டப்படும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையைத்தான் நாம் மக்களிடத்தில் வெளியிட்டோம்.

அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், அரசு வேலை வாய்ப்புகளில் 40 சதவிகித இட ஒதுக்கீடு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறப்பு தாய் சேய் நலன் திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதிகள். மேலும் மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

இந்த மாவட்டத்திற்கு, பாலக்கோட்டில் மகளிர் அரசு கலை - அறிவியல் கல்லூரி, பாலக்கோட்டில் தக்காளிக்கூழ் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை, பாலக்கோடு எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டம், தூள்செட்டி ஏரி திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும், பாலக்கோட்டில் பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக தருமபுரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும், தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்தில் விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும், தருமபுரியில் சிப்காட் இரண்டாம் தொழிற்பேட்டையும், பென்னாகரம், அரூரில் தொழிற்பேட்டையும் அமைக்க ஆவன செய்யப்படும், தருமபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையமும், நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலையும் அமைக்கப்படும், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம், தருமபுரி நகராட்சி மக்கள் பயனடையும் வகையில் மீண்டும் செயல்படுத்தப்படும், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்படும், பண்ணவாடியிலிருந்து நாகமரைக்கு காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும், பென்னாகரம் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும், பாப்பாரப்பட்டியில் வேளாண்மை பயிற்சி பள்ளி கல்லூரியாக உயர்த்தப்படும், மாரண்டஅள்ளியில் தென்னை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும், குருபரஅள்ளியில் கால்நடை மருத்துவமனை, தும்பலஅள்ளி அணையிலிருந்து எண்ணேகொல் புதூர் வந்து சேரும் வெள்ளி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும், மொரப்பூரில் பால் குளிரூட்டும் நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஒகேனக்கல் நீர் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்த நடவடிக்கை, பென்னாகரம், அரூர் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும், பென்னாகரம் அரூர் பகுதியில் அரசு கலை - அறிவியல் கல்லூரி, ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும், பாப்பாரப்பட்டியில் அரசு கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய ஊர்களில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்படும், அலியாளம் அணையில் இருந்து உபரி நீர் தருமபுரி மாவட்டத்து ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்து ஏரி குளங்களில் நிரப்பி விவசாய பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்‘ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களைச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

“அனைத்துச் சமூகத்துக்கும்  நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்முடைய மாநில உரிமைகள் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நம்முடைய தன்மானம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டது.

எனவே நம்முடைய தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய மாநில உரிமைகளைப் பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க, தருமபுரி இன்னும் பல சிறப்புகள் பெற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று அழைப்பார். உடன்பிறப்பே என்ற அழைப்பு கழகத் தோழர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சொந்தம்தான். எல்லோரும் தலைவருடைய உடன்பிறப்புகள்தான்.

எனவே அப்படிப்பட்ட உடன்பிறப்புகளாகிய நீங்கள், உரிமைகளை மீட்க நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று அன்போடு, பண்போடு, பாசத்தோடு, பரிவோடு, உரிமையோடு, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய மகனாக இருந்து உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்கிறேன். வெற்றி பெற வையுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

சேலம் வடக்கில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

சேலம் வடக்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் சகோதரர் ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட கழகத்தின் செயலாளராக நம்முடைய கழக அமைப்புகளை வழி நடத்திக் கொண்டிருப்பவர். ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுபவர். சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர். அவரைத்தான் மீண்டும் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சேலம் மேற்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் அவர்கள், ஒன்றிய கவுன்சிலராக இருந்து இப்போது ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்து அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கும் அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு பாடுபடும் பணியாற்றும் ஒரு சிறந்த செயல் வீரர்.

அவரைத் தான் நம்முடைய வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சேலம் தெற்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக எ.எஸ்.சரவணன் அவர்கள், மிகவும் எளிமையானவர், இனிமையானவர். பகுதிக் கழகத்தின் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவரைத்தான் நம்முடைய வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர் அருமை சகோதரர் மோகன் குமாரமங்கலம் அவர்கள், ஒரு பாரம்பரிய குடும்பத்தை சார்ந்தவர். சென்னை ராஜதானியின் பிரிமியராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களின் கொள்ளுப்பேரன். அவருடைய தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, மத்திய அமைச்சராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறார். அவருடைய தாத்தா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழக மக்களுக்காக குரல் கொடுத்தவர். எனவே ஒரு மிகப்பெரிய பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு கை சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தரவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இரும்பு நகரமாம் இந்த சேலத்திற்கு வந்திருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இளமை காலத்தில், அதாவது 1949-ஆம் ஆண்டு வாழ்ந்த சேலத்திற்கு வந்திருக்கிறேன். வீரபாண்டியார் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சேலம் மாவட்டத்திற்கு நம்முடைய கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இதுவரையில் எந்த மாவட்டத்திற்கும் செய்யாத சிறப்புகளை, சாதனைகளை இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு முழு காரணம் அண்ணன் வீரபாண்டியார்தான்.

சேலம் உருக்காலை. 50 ஆண்டு கனவு திட்டமான சேலம் இரயில்வே கோட்டம். பெரியார் பல்கலைக்கழகம். சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி. ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி. சேலம் மாநகராட்சிக்காக 283 கோடியில் காவிரி தனி கூட்டுக் குடிநீர் திட்டம். சேலம் மாநகரத்துக்கு 183 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம். சேலம் திருமணி முத்தாறு - வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ஒதுக்கி நிறைவேற்றம். சேலத்தில் 136 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை. ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம். 11 கோடி மதிப்பீட்டில் ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா. சேலம் மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள்.

சேலம் - ஆத்தூர் குடிநீர்த்திட்டம். 38 கோடி மதிப்பில் சேலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 150 கோடி மதிப்பில் உயர் மற்றும் தாழ்வழுத்த புதை கம்பி தொடர் மின் பாதைகள். மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம். ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள். சேலம் நகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம். சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழிப்பாதையைப் போட வைத்தது. சேலம் - நாமக்கல் நான்கு வழிப்பாதையை அமைத்தல். சேலம் செங்கப்பள்ளி நான்கு வழிப்பாதையை அமைத்தல். தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானசேவை திமுக ஆட்சியில் தான் மீண்டும் தொடங்கப்பட்டது.

இவ்வாறு கணக்கற்ற திட்டங்களை இந்த மாவட்டத்திற்குக் கொண்டுவந்து நிறைவேற்றிய ஆட்சிதான் கலைஞர் தலையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பதை பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதை எதற்காகச் சொன்னேன் என்றால் இப்போது தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். நான் இருக்கிறார் என்று தான் சொன்னேன். அவர் எப்படி முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர், “நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன்” என்று சொல்வார்.

“அனைத்துச் சமூகத்துக்கும்  நன்மை செய்யும் சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு சொன்னேன். இது போன்று பட்டியல் போடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி தயாராக இருக்கிறாரா?

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை இப்போது முடக்கி வைத்து இருக்கிறார். அதுதான் கொடுமை.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தி முடிக்கவில்லை. ஏற்காடு தாவரவியல் பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்தவில்லை! சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப் போவதாகச் சொன்னார் பழனிசாமி. வரவில்லை!

சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார். அமைக்கவில்லை! தலைவாசல் சந்தையை விரிவாக்கப் போவதாகச் சொன்னார். செய்யவில்லை! ஓமலூரைச் சுற்றி வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார். வரவில்லை! ஓமலூரில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும் என்றார். வரவில்லை! எடப்பாடி, வீரபாண்டி தொகுதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றார். அமைக்கப்படவில்லை.

சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்கப் போகிறது என்றார்கள். முதல்வரும் அரசு விழாக்களில் சொல்வார். வந்ததா? இதுவரை இல்லை! சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றித் தருவோம் என்று சொன்னார். அந்த கோரிக்கை நிறைவேறியதா? இல்லை! இல்லை! இல்லை! என்பது தான் இந்த ஆட்சி.

இவ்வாறு அவர் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

தமிழ்நாட்டை மட்டுமல்ல சொந்த மாவட்டத்தையே இன்றைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர் தான் இங்கு இருக்கும் பழனிசாமி அவர்கள். 10 வருடத்தில் எதையும் செய்யாத சாதிக்காத பழனிசாமி அவர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்.

சமூகநீதியைப் பற்றி இப்போது பேசத் தொடங்கி இருக்கிறார். சமூகநீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குக் கொடுத்த மிக முக்கியமான கொடை. அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதித் தத்துவம்தான் அதற்கு காரணம்.

அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் சமூக நீதி. அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்கிய ஆட்சிதான் தலைவர் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.

நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். நான் பொதுவாக பேச மாட்டேன். நான் கலைஞருடைய மகன் நான் எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கியது தி.மு.க! பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கியது தி.மு.க! இந்த 18 சதவிகிதத்தில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 சதவிகிதம் வழங்கி, முழுமையாக 18 சதவீதமும் பட்டியலினத்தவருக்கு கிடைக்க வழி செய்தது தி.மு.க! பழங்குடியினருக்கு தனியாக 1 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! மதம் மாறிய ஆதிராவிட கிறிஸ்தவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தி.மு.க! பிற்படுத்தப்பட்டவர்களில் 107 சாதியினருக்கு தனியாக 20 சதவிகிதமாக பிரித்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தது தி.மு.க! அருந்ததியர்க்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! இசுலாமியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளிலும் மூலமாக பெற்றுத் தந்தது தி.மு.க.

மத்திய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு காரணம் தி.மு.க. அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக - அனைத்து சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக - சமூகநீதி அரசாக செயல்பட்டதுதான் தி.மு.க. அரசு. எனவே உங்கள் அன்போடு ஆதரவோடு என்னுடைய தலைமையில் அடுத்து அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து இதைத்தான் செய்யப் போகிறது.

நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.

தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிடும் போதெல்லாம் திருக்குறள் போன்ற 2 வரிகளைச் சொல்வார். “சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்”

அதைத்தான் அவருடைய மகன் ஸ்டாலினும் சொல்லுகிறான். “சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்”. அந்த அடிப்படையில் தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் உள்ளவற்றை சுருக்கமாக உங்களுக்கு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், கொரேனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சி பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த நாள் அன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும், மகளிருக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம், மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இளைஞர்களுக்கு வருடம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், ஆட்டோ வாங்குவோருக்கு 10,000 ரூபாய் மானியத் தொகை வழங்கப்படும். இன்னும் ஏராளம் உண்டு. இப்போது நான் சொன்னது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு.

இந்த சேலம் மாவட்டத்திற்குரிய வாக்குறுதிகள், சேலத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி; மெட்ரோ ரயில் திட்டம்; ஜவுளிப் பூங்கா மற்றும் ஜவுளியை அடிப்படையாகக் கொண்ட சிப்காட் தொழிற்பேட்டை. சேலம் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்படும். சேலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படும். சேலத்தில் தகவல் தொழிட்நுட்பப் பூங்கா மீண்டும் செயல்படுத்தப்படும். சேலத்தில் பூக்கள் சந்தை வசதியான பெரிய இடத்தில் மாற்றி அமைக்கப்படும். ஓமலூரில் நறுமணத் தொழிற்சாலை; அரசு கலை அறிவியல் கல்லூரி; வெல்லமண்டி. செவ்வாய்ப்பேட்டை இராமலிங்கம் நாளங்காடியில் உள்ள பழைய பால் சந்தை வசதியான பெரிய இடத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். சேலத்தில் லாரிகள் நிறுத்துவதற்கு வசதியான பெரிய இடம். சேலத்தில் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். இது மட்டுமல்ல தமிழ்நாடு புகைப்பட வீடியோ கலைஞர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நல வாரியங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட உள்ள இந்த வாக்குறுதிகளுடன், பத்தாண்டு காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய தொலைநோக்கு அடிப்படையிலான திட்டங்களுக்கான வாக்குறுதிகளை, கடந்த 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் அளித்திருக்கிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

தமிழக மக்கள் வாக்களிக்கப் போவதற்கு முன்பு யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். டெல்லியில் இருப்பவர்கள் தமிழர்களை இழிச்சவாயர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். ஆனால் அதற்காக மட்டுமல்ல, இந்த தேர்தல் என்பது நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நடக்கின்ற தேர்தல் என்பதை .மறந்துவிடாதீர்கள்.

நம்முடைய தன்மானம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநில உரிமைகளை மீட்டிட வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே மாநில உரிமைகளை பாதுகாக்க, தொழில்துறை செழிக்க, சேலம் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க, இது வீரபாண்டியார் மாவட்டம் என்பதை மீண்டும் நிலை நிறுத்திக் காட்டிட, உதயசூரியனுக்கு – கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு, உரிமையோடு, விரும்பி, வேண்டி, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவர் கலைஞரின் மகனாக, உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்கிறேன். ஆதரவு தாருங்கள். வெற்றி பெற வையுங்கள். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories