தேர்தல் 2024

“அரசியல் ஆதாயத்துக்காக மத ரீதியான வன்முறையை தூண்டும் பாஜக” - மோடியின் பேச்சுக்கு விசிக கடும் கண்டனம் !

வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

“அரசியல் ஆதாயத்துக்காக மத ரீதியான வன்முறையை தூண்டும் பாஜக” - மோடியின் பேச்சுக்கு விசிக கடும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். இந்த சூழலில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசியுள்ளார் மோடி.

மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

“அரசியல் ஆதாயத்துக்காக மத ரீதியான வன்முறையை தூண்டும் பாஜக” - மோடியின் பேச்சுக்கு விசிக கடும் கண்டனம் !

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது திரு. நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். திரு. மோடி அவர்களின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

“காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

“உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் ? பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு, நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள்.

“அரசியல் ஆதாயத்துக்காக மத ரீதியான வன்முறையை தூண்டும் பாஜக” - மோடியின் பேச்சுக்கு விசிக கடும் கண்டனம் !

இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்; அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது" என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்!!"

banner

Related Stories

Related Stories