தேர்தல் 2024

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

“தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?” என கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (09-04-2024) மதுரையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வந்திருக்கிறேன்! நீதி தவறிய மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண்ணிற்கு வந்திருக்கிறேன்! வீரம் விளைந்த சிவகங்கைச் சீமைக்கு வந்திருக்கிறேன்! மதுரை - சிவகங்கை தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தையே, தென் மண்டல மாநாட்டைப்போல் நடத்திக் காட்டி இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்கள். எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், பிரம்மாண்டமாகச் செய்து காட்டுபவர் அமைச்சர் மூர்த்தி. அவரின் சிவகங்கைச் சீமையின் கழகக் காவலர் பெரியகருப்பனும் இங்கு இருக்கிறார். சொல்லவா வேண்டும்! இரண்டு செயல்வீரர்களும் சேர்ந்து - இந்த மாநாட்டைத் தேர்தலுக்கான வெற்றிக்களமாக மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். இவர்களுக்கு தோளோடு தோள்நின்று, ஒத்துழைப்பு வழங்கிச் செயல்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளரும் - சகோதரர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளருமான சு.வெங்கடேசன் அவர்கள் போட்டியிடுகிறார். தோழர் சு.வெங்கடேசன் அவர்கள், நாடறிந்த எழுத்தாளர் - பேச்சாளர்! மதுரைக்காக மட்டுமல்ல - தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல - இந்திய நாட்டிற்காகவும், நாடாளுமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருபவர். பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதச் செயல்கள் எதுவாக இருந்தாலும், அவரின் பாணியில் கண்டித்து, கவனத்தை ஈர்க்கக் கூடியவர்! கோடிக்கணக்கான தொகையைக் கல்விக் கடனாக மாணவர்களுக்குப் பெற்றுத் தந்தவர். எழுத்தாளர் என்பதனால், தன்னுடைய செயல்பாடுகளை “5 ஆண்டுகள் – 150 வெற்றிகள்” என்று புத்தகமாகவே போட்டிருக்கிறார். அவர் மீண்டும் மதுரையில் வெற்றி பெற்று, உங்கள் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

அடுத்து, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளராகக் கார்த்தி சிதம்பரம் அவர்கள் போட்டியிடுகிறார். மரியாதைக்குரிய அண்ணன் ப.சிதம்பரம் அவர்களின் அருமை மகன். இதே, சிவகங்கை தொகுதியில் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே நல்ல பல திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தவர் மரியாதைக்குரிய ப.சிதம்பரம் அவர்கள். இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய பொருளாதார அறிஞர்! அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலில் இந்தியாவின் கதாநாயகனாக இருக்கும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தவர்! அவர் வழியில், பணியாற்றி வரும் கார்த்தி சிதம்பரம் அவர்கள், பொருளாதாரத்தை எளிய மக்களின் மொழியில் விளக்கும் ஆற்றல் பெற்றவர். திராவிட மாடல் அரசின் திட்டங்களால், கடைக்கோடி மக்களும் எப்படி பயனடைகிறார்கள் என்று, அவர் பிரச்சாரம் செய்யும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல்! கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை மக்களின் குரலாக, நாடாளுமன்றத்தில் ஒலிக்கக், கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.

இந்தியா கூட்டணியின் இந்த இரண்டு வேட்பாளர்கள், சு.வெங்கடேசன் அவர்களையும் – கார்த்தி சிதம்பரம் அவர்களையும் – மீண்டும் இந்த முறை கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக - உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும், இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன, வெற்றி உறுதி! மீண்டும் எம்.பி. ஆகிவிடுவீர்கள், வேட்பாளர்கள் உட்காருங்கள்!

நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது! வரப்போகும் பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார்?

நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கும் பிரதமராக அவர் இருப்பார்!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், நாளொன்றுக்கு 400 ரூபாய் கொடுக்கும் பிரதமராக இருப்பார்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கும் பிரதமராக இருப்பார்!

சமூகநீதி மேல் உண்மையான அக்கறையுடன், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காட்டை உயர்த்தும் பிரதமராக இருப்பார்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் பிரதமராக இருப்பார்!

மொத்தத்தில், இந்திய ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை – மதச்சார்பின்மையை – சமூகநீதியை மதிக்கும் பிரதமராக இருப்பார்! மிகவும் முக்கியமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் - தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக, இந்தியா கூட்டணி பிரதமர் ஆட்சி செய்வார்! இன்னும் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, நிச்சயம் இருக்க மாட்டார்!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! இங்கு பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே… அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்!

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதற்குக்கூட, உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார்.

கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த இரண்டு மாநில முதலமைச்சர்களும் தில்லியில் சாலையில் போராடும் அவல நிலையை ஏற்படுத்தினார் பிரதமர்.

மேற்கு வங்கத்திற்கும் இதே நிலைமைதான்!

மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். ஆட்சியைக் கலைத்தார். ஆளும் கட்சியை உடைத்து, இப்போது அந்த மாநிலத்தையும் நாசமாக்கிவிட்டார்!

அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்ன நிலைமை? பழங்குடியின முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்தார்!

டெல்லியிலும். பஞ்சாப்பிலும் என்ன செய்தார்? அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை விட்டுத் தொல்லை கொடுக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், E.D. – I.T. – C.B.I. – ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா!

இவரை எதிர்த்து யாராவது பேசினால் என்ன நடக்கும்? சமீபத்திய உதாரணம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்! அவர் என்ன சொன்னார்! 2019-இல் நடந்த புல்வாமா தாக்குதல், அரசியல் ஆதாயத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. ஊழல்வாதிகள் அவர்கூடவே இருப்பதால், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விளக்கமாக ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார். உடனே அவர் வீட்டில் C.B.I. ரெய்டு! எவ்வளவு மலிவான அரசியல்?

பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்?

குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா?

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாரா?

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன கூறினார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் வன்புணர்வு செய்தார். இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்கள். காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார்கள்! இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடிதான்!

ஹாத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி தலித் பெண் ஒருவர், வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தாரே! அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்தார்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ.க. ஆட்சி!

பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா?

மோடி இந்த நாட்டிற்குச் செய்தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார்! எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ் – கல்புர்கி கொல்லப்பட்டதை மவுனமாக வேடிக்கை பார்த்தார்! மதவெறியர்களின் வன்முறையையும் – கொலைகளையும் – தாராளமயமாக்கினார்! இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது!

இப்போது புதிதாக என்ன சொல்கிறார் பிரதமர்? நாங்கள்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்தோமாம்! எவ்வளவு பெரிய பொய்! அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு - என்று சொல்லுவார்களே! அதுபோன்றுதான் இருக்கிறது. பா.ஜ.க. தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தடுத்த திட்டங்களைப் பட்டியல் போடலாமா?

தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க அன்னை சோனியா – பிரதமர் மன்மோகன் சிங் - முத்தமிழறிஞர் கலைஞர் – ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கினார்களே!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

ஏன், பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டித் தராமல் தமிழ்நாட்டிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே! இந்த எய்ம்ஸ் உடன் அறிவித்த, மற்ற பா.ஜ.க. ஆளும் மாநில எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம், பயன்பாட்டிற்கு வந்துவிட்டதே. ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வரவில்லை.

நாங்கள் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா மட்டும் திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்!

பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த நிதிக்குக் கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைப் ‘பிச்சை’ என்று சொல்லி ஏளனம் பேச வைக்கிறார்கள்!

இந்த இலட்சணத்தில். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்! தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் செய்யப்பட்ட நன்மைகளையும், திட்டங்களையும் பட்டியல் போட்டால், ஒரு நாள் முழுவதும் அந்தச் சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்க முடியும். சில சாதனைகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

பிரதமர் அவர்களே! குறித்துக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது.

65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அன்னைத் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்தோம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தோம்.

நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் மேம்பாலங்கள், சாலைகள் என்று 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய்க்குத் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கப்பட்டது.

இன்னும் நிறைய இருக்கிறது. பிரதமர் மோடியால் இப்படி பட்டியல் போட முடியுமா? தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது? நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன் உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.

இந்த மாமதுரைக்கும், சிவகங்கைக்கும் அறிவின் அடையாளமாக - வீரத்தின் அடையாளமாக - பண்பாட்டின் அடையாளமாக - நம்முடைய அரசு கொடுத்திருக்கும் முத்தான மூன்று திட்டங்கள் என்ன? தி.மு.க. என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல. தமிழ்ச் சமுதாயத்தை தட்டியெழுப்பும் அறிவியக்கம் என்பதற்கு அடையாளமாக, கழகத்திற்கு மட்டும் அறிவாலயம் கட்டாமல் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் பயனளிக்கும் “அறிவு ஆலயங்களை“ கட்டி வருகிறோம். மதுரையில் அறிவின் அடையாளமாக பிரமாண்மாண்டமாக எழும்பி இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய வாதங்களால் தடை ஏற்படுத்தியபோதும், அதை உடைத்து வெற்றி பெற்று, ஜல்லிக்கட்டு நடத்துகிறோம்.

உலகமே நம்முடைய வீர விளையாட்டைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்! தமிழ் நாகரிகத் தொட்டிலாக இருக்கும் கீழடி ஆய்வு நடக்க கூடாது என்று எப்படியெல்லாம் தடை ஏற்படுத்தியது பா.ஜ.க! எத்தனை சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள்! நம்முடைய சு.வெங்கடேசனைக் கேட்டால் ஒரு மணி நேரம் விளக்குவார். அந்தத் தடையை எல்லாம் உடைத்து எறிந்து, தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக அமைக்கப்பட்டிருக்கிறது, கீழடி அருங்காட்சியகம்!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

இப்படி தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொன்னால், எல்லாக் கூட்டங்களும், “சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாக“ மாறிவிடும். அதனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் சொல்லட்டுமா?

எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் என்று 1 கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையுடனும், பாசத்துடனும் சொல்லும், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும் - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

16 இலட்சம் குழந்தைகள் காலையில் பசியுடன் பள்ளிக்கு வராமல்; சூடாகவும், சுவையாகவும், சத்தாகவும் சாப்பிட்டுப் பாடங்களை நன்றாக கவனிக்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மகளிரும் சுதந்திரமாக, கட்டணமே இல்லாமல் 460 கோடி முறை பேருந்தில் பயணித்திருக்கும் விடியல் பயணம் திட்டம்!

அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லும் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் தரக் கூடிய - புதுமைப்பெண் திட்டம்!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற, 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கியிருக்கும் - நான் முதல்வன் திட்டம்!

இல்லம் தேடிக் கல்வி மூலமாக, 24 இலட்சத்து 86 ஆயிரத்து 611 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக இதுவரை ஒரு கோடியே 71 ஆயிரம் பேர் பலன் பெற்றிருக்கிறார்கள்!

இது அத்தனையையும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். எப்படிப்பட்ட கடுமையான நிதி நெருக்கடியில் தமிழ்நாட்டைத் தவிக்க விட்டுச் சென்றார் பழனிசாமி என்று, இங்கு மேடையில் உட்கார்ந்திருக்காரே நம்முடைய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவரிடம் கேட்டால் டீட்டெய்லாக சொல்வார்!

திட்டங்களைத் தீட்டுவது மட்டுமல்ல, அதன் பலன்கள் முறையாக சென்று சேருகிறதா என்று நாங்கள் நேரடியாக கண்காணிக்கிறோம். இங்கு வருவதற்கு முன்னால் ஒரு வீடியோ பார்த்தேன். அதில், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகன் ஸ்ரீகாந்த் பேசுகிறார்! மாற்றுத் திறனாளியான அவர், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் நான்கு மாதமாக இடைவிடாமல் படித்து வங்கித் தேர்வில் சாதித்திருக்கிறார். அதைப் பார்த்தபோது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகமாகி இருக்கிறது என்று சர்வேயில் வந்திருக்கிறது!

இப்படி, நம்முடைய திராவிட மாடல் அரசு கல்விக்கான திட்டங்களாகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்! கல்வியையும், மருத்துவத்தையும் நம்முடைய இரு கண்களாகப் பார்க்கிறோம். இதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், ‘திராவிடம்’ என்ற சொல் மேல் பயம் இருக்கின்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்!

நான் அடிக்கடி சொல்வதுண்டு. மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குதான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல! அதுமட்டுமல்ல, நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அதிகமாக கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் எது தெரியுமா? இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான்.

அன்புக்கு மட்டுமல்ல – ஆன்மீகத்திற்கும் அடையாளம் மதுரைதான்! கள்ளழகர் வைகையில் இறங்கும் – இந்தத் ‘திரு ஆலவாய்’ நகரான மாமதுரையில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மூலமாகச் செய்யப்பட்டுள்ள சாதனைகளை சுருக்கமாகச் சொல்லலாமா?

நம் அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1069 நாட்கள்தான் ஆகிறது. ஆனால், 1556 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம்.

6 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம்.

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கிராமப்புறக் கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆண்டுக்கு 1250 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யக் கோயில் ஒன்றிற்கு 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

ஒரு கால பூசைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு முதன்முறையாக, மாத ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இறைவனுடைய கோயிலில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்திற்கு ஏற்ப 11 பெரிய திருக்கோயில்களில் முழு நேர அன்னதானம் தொடங்கப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேர் பசியாற உணவு உண்கிறார்கள்.

17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இதுவரை 4 இலட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

திருக்கோயில்கள் சார்பில் கல்லூரிகளும், பள்ளிகளும் தொடங்கப்பட்டு, கல்லூரிகளில் 11 ஆயிரத்து 65 மாணவ - மாணவியர்களும், பள்ளிகளில் 13 ஆயிரத்து 65 மாணவ - மாணவியர்களும் படிக்கிறார்கள்.

அதனால்தான், திராவிட மாடல் அரசு, பக்தர்கள் போற்றும் அரசாகவும் - அற்பர்கள் கதறும் அரசாகவும் இருக்கிறது! மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மீகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர பா.ஜ.க. போன்று மக்களைப் பிளவுபடுத்தப் பயன்படுத்தக் கூடாது.

நம்முடைய நாட்டை, பாஜக நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. இந்தியாவை மீட்டு - மீண்டும் வளர்ச்சிப்பாதையில் நடைபோட வைக்கும் பல்வேறு வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். தி.மு.க.வின் வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்திய மக்களிடம் பா.ஜ.க. அரசு அதிக விலைக்கு விற்று இலாபம் பார்த்த பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களும் - ஜி.எஸ்.டி. சட்டமும் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில், மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி அபராதம் விதிக்கும் முறை நீக்கப்படும்!

மதுரை – திருப்பதி இரயில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்!

மதுரை – போடி இரயிலை லோயர்-கேம்ப் வரை நீட்டிக்க ஆவன செய்யப்படும்!

மதுரை விமான நிலையம் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்!

மதுரையில் ஒன்றிய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்!

காரைக்குடி முதல் நத்தம் வரை சிங்கம்புணரி – கொட்டாம்பட்டி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்!

இப்படி வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம் என்றால், தி.மு.க. என்றாலே, “சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!”. இப்படி நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, செய்ய இருப்பதைப் பற்றிப் பேசினால், பிரதமர் மோடி என்ன பேசுகிறார்?

மத உணர்வுகளைத் தூண்டி, இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்த முடியுமா, வாக்கரசியல் பண்ண முடியுமா, மூழ்கிக் கொண்டு இருக்கும் பா.ஜ.க.வையும் – தன்னுடைய இமேஜையும் கரைசேர்க்க முடியுமா என்று திசைதிருப்பும் அரசியலை பேசுகிறார்! மக்கள் ஆதரவுடன் நாடு முழுவதும் பேசப்படும் நம்முடைய திராவிட மாடல் அரசு - குஜராத் மாடலை என்று போட்டோஷாப் மூலமாக போலியாக கட்டமைத்த மாடலை உடைத்து நொறுக்கிவிட்டதே என்ற வன்மத்தில், தமிழ்நாட்டிற்குள் மட்டும் பொய்ப் பிரச்சாரம் செய்வதில்லை; வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி ஆதாயம் தேடப் பார்க்கிறார் பிரதமர்.

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லும் பிரதமர் மோடி அவர்கள், வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுவிட்டாரா? அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டாரா? ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு என்று பத்தாண்டுகளில் 20 கோடிப் பேருக்கு வேலை கொடுத்துவிட்டாரா? உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கிவிட்டாரா? விலைவாசியைக் குறைத்துவிட்டாரா? இந்திய நதிகளை இணைத்துவிட்டாரா? எல்லோருக்கும் வீடு கொடுத்துவிட்டாரா? குழாய் மூலம் எரிவாயு இணைப்பு கிடைத்துவிட்டதா?

பெண்களுக்கான நடமாடும் வங்கி என்று சொன்னாரே, அது எங்கேயாவது நடமாடிப் பார்த்தீர்களா? பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திவிட்டாரா? வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னாரே, மணிப்பூருக்கு நேர்ந்தது என்ன? அரசியல் தலையீடுகள் இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும் என்று சொல்லிவிட்டு E.D. – I.T. – C.B.I. எல்லாம் பா.ஜ.க. துணை அமைப்புகளாக மாற்றிவிட்டாரே!

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வந்தால், “வணக்கம்! எனக்கு இட்லியும் - பொங்கலும் பிடிக்கும்; தமிழ் பிடிக்கும்; திருக்குறள் பிடிக்கும்; ஓட்டு போடுங்கள்” என்று கேட்கும் பிரதமரை, நாங்கள் கேட்கிறோம்!

தமிழ் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாயும் – சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபாய் ஏன் என்று கேட்கிறோம்! தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை விட்டு விதண்டாவாதம் பேச வைக்கிறார்! தமிழின் சிறப்புகளைச் சொன்ன, கால்டுவெல்லையும் ஜி.யு.போப்பையும் ஆளுநரை வைத்து இழிவுபடுத்துகிறார்கள்! அதையாவது கண்டித்தீர்களா? திருவள்ளுவருக்கு ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள் எனக் கேட்கிறோம். இப்படி அத்தனை தமிழ் விரோத வேலையும் செய்துவிட்டு, தயவுசெய்து வாயால் வடை மட்டும் சுடாதீர்கள் என்று கேட்கிறோம்.

இப்படி தமிழுக்கும் – தமிழ்நாட்டிற்கும் – தமிழினத்திற்கும் - விரோதமாக இருக்கும் பா.ஜ.க.வுக்குப் பாதம்தாங்கியாக இருந்து, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி! அவர் இப்போது என்ன திட்டத்தில் இருக்கிறார்? வாக்குகள் பிரித்து பா.ஜ.க.வுக்கு உதவுகிறேன் என்று B-டீம் ஆக வந்திருக்கிறார் பழனிசாமி! கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே... எங்கேயாவது, பா.ஜ.க.வையோ - மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை மறந்தாவது பேசுகிறாரா?

“தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மண்புழுவாக ஊர்ந்து, பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்த பழனிசாமியால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நன்மை என்று ஏதாவது இருக்கிறதா? துரோகத்திற்கு உருவம் இருந்தால், அது பழனிசாமிதான் என்று உலகத்திற்கு காட்டியதைவிட வேறு என்ன செய்திருக்கிறார்? தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர்தான், முதுகெலும்பு இல்லாத பழனிசாமி! பதவி வாங்கக் காரணமாக இருந்த அம்மையார் சசிகலா – டி.டி.வி.தினகரன் ஆகியோருக்குத் துரோகம் செய்தார். பதவியைத் தொடரத் துணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்குத் துரோகம் செய்தார். இப்படி குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை!

இப்போது பிரிந்து சென்றவர்கள் பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணியாகவும் – பழனிசாமி கள்ளக் கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள்! இப்போது இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் - ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி!

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு!

அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டுத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு!

எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய தமிழர் விரோதிகளை ஒருசேர வீழ்த்துங்கள்.

அதற்கு, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் - சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களுக்குக் கை சின்னத்திலும் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்.

நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.”

Related Stories

Related Stories