தி.மு.க

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக பாடுபட்ட ராமசாமி படையாட்சியார் சிலைக்கு தி.மு.க தலைவர் மரியாதை!

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளான இன்று கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளான இன்று கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய சீரிய பணிகளை நினைவுகூர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெருமக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளான இன்று - ஏழை எளிய மக்களுக்காக அவர் ஆற்றிய சீரிய பணிகளை நினைவுகூர்ந்து - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

அய்யா அவர்கள் 1952 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான நண்பர். ஆகவேதான், 1996-2001-ல் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன்- வன்னிய சமுதாயப் பெருமக்கள் “அவருக்கு சிலை வைக்கச் சென்னையில் இடம் வேண்டும்” என்று கோரியபோது, “இடம் மாத்திரமல்ல. அந்த இடத்திலே சிலையும் கழக அரசின் சார்பிலேயே நிறுவப்படும்” என்று வாக்குறுதியளித்து - அதன்படியே சென்னை கிண்டியில் படையாட்சியார் அவர்களின் வெண்கலச் சிலையை அமைத்து - 21.2.2001 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்.

சமூகநீதியின் பாதுகாப்பு அரணாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் உற்ற துணையாக நின்று ஆட்சியில் இருந்த நேரங்களில் எல்லாம் - அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறது.

முதலில் 1969-ல் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இருந்த 25 சதவீத இடஒதுக்கீட்டை 1971-ஆம் ஆண்டு 31 சதவீதமாக உயர்த்தியதும், பிறகு வன்னியர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று - 1989-ல் ஆட்சிக்கு வந்ததும் - போராட்டம் ஏதும் இல்லாமலேயே - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். மத்திய அரசு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக விளங்கியதும் திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான்!

ஆகவே சமூக முன்னேற்றத்திற்காக - ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்காக ஆக்கபூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அய்யா படையாட்சியார் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து இந்த நாளில் பெருமிதம் கொள்கிறேன். அவர் புகழ் நீடுழி வாழ்க!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories