தி.மு.க

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” : திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

“தி.மு.க அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் கொள்கையிலும் மாறவில்லை; எங்கள் இயக்கத்தின் லட்சியமும் மாறவில்லை; எங்கள் கொள்கையும் நீர்த்துப்போய்விடவில்லை” என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, அந்த இடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தொடர்சியாக 4வது முறை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகியுள்ள திருச்சி சிவா கலைஞர் தொலைக்கட்சிக்கு நேர்காணம் ஒன்றை அளித்துள்ளார். அந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திருச்சி சிவா அளித்த சுவாரஸ்ய பதிலே இந்த தொகுப்பு..

பெரும் ஜாம்பவான்களுக்கு மட்டுமே தி.மு.க தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. இப்போது 4-வது முறையாக உங்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பு. எப்படி உணர்கிறீர்கள்?

நான் கேட்காமலேயே இந்த வாய்ப்பை எனக்கு தளபதி கொடுத்திருக்கிறார். கடந்தமுறை மாநிலங்களவைத் தேர்தல் வந்தபோது கழகத்துக்கு போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் கூட இல்லை. ஆனால், அப்போதும் ‘நீங்கள் நில்லுங்கள். நாம் வெற்றிபெறுவோம்’ என்று தளபதிதான் நம்பிக்கையுடன் நிற்கச் சொன்னார்.

அந்தத்தேர்தலிலும் வெற்றிபெற்றோம்; மிகப்பெரிய வெற்றி அது. தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார். ‘உனக்கு என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். அடிக்கடி வந்து வலியுறுத்துவதுதான் ஒருவனுடைய பலவீனமாகும்’ என்று. அப்படி, அதே பாணியில் தளபதி இந்தப் பொறுப்பை நான் கேட்காமலேயே வழங்கியிருக்கிறார்.

எந்தப் பின்புலமும் இல்லாதவன் நான். உழைப்பவனை கழகம் அங்கீகரிக்கும் என்பதற்கு சான்று எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு. தியாகராயர் முதல் கலைஞர் வரை எல்லோருக்கும் வலிமையான உறுதுணை தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தளபதி தனிப்பெரும் தலைவராக, அனைத்து தலைவர்களின் வடிவமாக இருக்கிறார். அவரால் நேரடியாக வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை மிகப்பெரியதாக கருதுகிறேன்.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

ஒரு தத்துவ மரபின் முழுமையான வடிவம் உங்கள் தலைவர் என்கிறீர்கள். அவரே கொடுத்திருக்கும் வாய்ப்பு கூடுதல் பொறுப்பை உணர்த்துகிறதா?

நிச்சயமாக. தலைவர் கலைஞர் சொன்னதாக தளபதி அடிக்கடி சொல்வார், ‘இது பதவியல்ல; பொறுப்பு என்று’. நம் மீது நம்பிக்கை வைக்கும்போது, இயல்பாகவே பொறுப்புணர்ச்சியும் அடக்கமும் அதிகரிக்கிறது. தளபதியின் பிரதிநிதி நான் என்று நிரூபிக்கும் வகையில் நடந்துகொள்வதுதான், இந்த பொறுப்புக்கான அடையாளம். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சான்றிதழை பெறுவதற்காக எங்களோடு அவர் வந்தபோதும், கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோதும் என் கண்கள் பனித்தன. நான் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

கலைஞருக்கு அடுத்த தலைவர் என்கிற போது, அவருக்கும் இவருக்கும் என்ன வித்யாசம் என்றால், அவர் முழுக்கைச்சட்டை; இவர் அரைக்கைச்சட்டை, அவ்வளவுதான் வித்யாசம் (நெகிழ்ச்சியுடன் சிரிக்கிறார்). தளபதியின் முடிவெடுக்கும் ஆற்றல், கூட்டணி கட்சி உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறன் போன்றவை வியக்க வைக்கின்றன. அதற்கான பரிசுதான், நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டிய மிகப்பெரிய வெற்றியும்; இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சி என்கிற அங்கீகாரமும்.

டெல்லி என்பது எப்போதும் திமுகவை ஆச்சரியத்தோடு பார்க்கின்ற ஒரு இடம். அதற்கு நீண்ட மரபு இருக்கிறது. டெல்லியில் திமுகவின் குரலை பதிவுசெய்வதற்கான திட்டமிடல்களை எப்படிச் செய்கிறீர்கள்?

எங்களை முழுமையாக வழிநடத்தும் தலைமையாக தளபதி இருக்கிறார். மக்களவையில் டி.ஆர்.பாலு, கனிமொழி, தம்பி ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள் அனுபவமிக்கவர்கள். அவர்கள் அடுத்த தலைமுறை ஆட்களை வழிநடத்துகிறார்கள். மாநிலங்களவையில் நீண்ட காலம் கழித்து இப்போதுதான் திமுகவின் உறுப்பினர் பலம் 7ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கே எண்ணிக்கை அடிப்படையிலான நேர ஒதுக்கீட்டில், கிடைக்கும் நேரம் குறைவு. ஆனால், மிகக்குறைவான நேரத்துக்குள் வலிமையான கருத்துக்களை எடுத்துவைப்பது, நெருக்கடியான நேரங்களில் கட்சியின் மரபுக்கு ஏற்ப சுதந்திரமாக முடிவெடுப்பது போன்றவற்றில் முனைப்பு காட்டுகிறோம்.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

டெல்லியை அதிகார சூதாட்டம் நடக்கும் இடம் என வர்ணிப்பார்கள். டெல்லி திமுகவை வழிநடத்த திமுகவில் அண்ணா, முரசொலிமாறன் போன்ற வலிமையான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இன்று என்ன நிலைமை?

டெல்லியில் தளபதி மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது. பஞ்சாப், ஒரிசா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எங்களிடம் பேசும்போது, ‘மீண்டும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். உங்கள் தலைவரிடம் சொல்லி, அதற்கான தேசிய முன்னெடுப்புகளை எடுக்கச் சொல்லுங்கள்’ என்கிறார்கள். அந்த அளவு பாஜகவை எதிர்ப்பதில் உறுதியான கட்சி திமுக தான் என்கிற எண்ணம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது.

பொதுவாக சில கட்சிகளில் உறுப்பினர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் போக்கு வேறு மாதிரியானதாக இருக்கும். சில கட்சிகள் நன்றாக இருக்கும்; உறுப்பினர்கள் போக்கு வேறு மாதிரியானதாக இருக்கும். ஆனால், கட்சியின் கொள்கையும், உறுப்பினர்களின் பண்புநலன்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் கட்சி திமுக.

அதனால் தான், துணைக்குடியரசுத் தலைவர் இல்லாதபோது மாநிலங்களவையை வழிநடத்துவது, சபாநாயகர் இல்லாதபோது மக்களவையை வழிநடத்துவது போன்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர்களுக்கு மாநிலங்களவை கேள்வி நேர நடைமுறைகள் குறித்து வகுப்பு எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவையெல்லாம், திமுகவின் பிரதிநிதிகள் என்பதால், தி.மு.க நேர்மையாக நடந்துகொள்ளும் என்பதால் எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்.

இக்கட்டான நேரத்தில், நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நாங்கள் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைகளை தளபதி ஆமோதிக்கிறார். தளபதியின் தலைமையும், எங்களின் அனுபவமும் டெல்லியில் எங்களை வழிநடத்துகிறது.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

கூட்டாட்சி தத்துவம் என்பதன் பொருளையே மத்திய அரசு, மாநில உரிமைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்வது என்பதாக பா.ஜ.க மாற்றி வருகிறது. இந்த சூழலில் ஒரு MP-யின் முக்கியமான பணி என்ன?

We do lot of homeworks. ஒரு மசோதா வரும்போது, சட்டம் வரும்போது அதை எப்படி கையாள்வது என முன்கூட்டியே திட்டமிடுகிறோம். எதிர்க்கட்சிகளிடம் எண்ணிக்கை கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு மசோதாவுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். அப்படியான நேரங்களில் பாஜகவே ஆடிப்போகும். வெளியூரில் இருக்கிற மத்திய அமைச்சர்களைக்கூட உடனடியாக அவைக்கு வரச்சொல்லி வாக்களிக்க வைப்பார்கள். அப்படியான நெருக்கடிகளை பாஜகவுக்கு உருவாக்குகிறோம். சில நேரங்களில் எதிர்க்கட்சிகளே ‘எதற்கு வாக்கெடுப்பு? எப்படியும் அவர்கள் தானே வெல்லப்போகிறார்கள்’ என சலித்துக் கொள்வார்கள்.

ஆனால், ஒரு மசோதாவை யார் உண்மையிலேயே ஆதரிக்கிறார்? யார் எதிர்க்கிறார்? என்பது மக்களுக்கும், வரலாற்றுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்கெடுப்பு வேண்டும் என நிர்பந்திக்கிறோம். நீட் தேர்வு, குடியுரிமை மசோதா போன்றவற்றில் அதிமுக அப்படித்தான் அம்பலப்பட்டுப்போனது. இந்த அம்பலப்படுத்தல் தான் எங்களின் முக்கியமான பணி.

எல்லாவற்றிற்கும் சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய காலத்தில் இருக்கிறது அரசியல். ஆனால், சட்டப்போராட்டத்தில் தீர்ப்பு வழங்கவேண்டிய நீதிபதிகள் விலைபோகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது. நீதிபதிகளே சந்தேகத்துக்கு உள்ளாகும் காலத்தில், மக்களுக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்திலேயே தடுப்பதற்கான சூழலை உருவாக்க முடியும் என நம்புகிறீர்களா?

ஜனநாயகம் என்பதே பெரும்பான்மை தான். அந்த பெரும்பான்மை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு செல்ல பயன்பட வேண்டும். ஆனால், பெரும்பான்மையை தாங்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்ற பயன்படுத்தினால், அது எதேச்சதிகாரம். பாஜக கொண்டாடும் சோ -வே சொல்லியிருக்கிறார், “கலைஞரைப் போல எதிரிகளை பேசவிட்டு, அவை அத்தனைக்கும் வரிக்கு வரி பதில் சொல்கிற ஆற்றல் வேறு யாருக்கும் கிடையாது" என்று. நம்மை எதிர்த்து ஒருவர் கருத்துசொல்லலாம். ஆனால், நம்மை எதிர்த்துக் கருத்துசொல்பவரின் கருத்துரிமைக்காகவும் நாம் உயிரைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். நீதித்துறை மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

இன்றைக்கு திமுக மீதான அவதூறுகள் அதிகரித்திருக்கின்றன. வன்மமான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இந்த சூழலில், ஒரு கொள்கை பரப்புச் செயலாளராக உங்கள் பணி திருப்தியளிக்கிறதா?

எதிரிகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதில் எந்தக்காலத்திலும் சுணங்கிப்போன கட்சி அல்ல திமுக. தத்துவார்த்த ரீதியிலும், அடிமட்ட ரீதியிலும் என எல்லா தளத்திலும் எதிரிகளின் அவதூறுகளை எதிர்கொள்வதற்கு திமுகவில் படைவரிசை இருக்கிறது. சொல்லப்போனால், திமுகவில் மட்டும் தான் இருக்கிறது.

பொதுக்கூட்ட மேடைகளுக்கு வந்து அரசியல் கற்க இளைஞர்கள் தயாராக இல்லை; செல்போன்களில் நடக்கிறது இன்றைய அரசியல் என்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் அவதூறுகளை எதிர்கொள்ள திமுகவின் கொள்கை பிரச்சார அணியின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

பொதுக்கூட்டங்களின் மதிப்புகள் எப்போதும் குறையாது. இளையாராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களை நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் கேட்பதற்கான வாய்ப்பு இன்று உள்ளது. ஆனாலும், இளையராஜா, எஸ்.பி.பி. பாடல் கச்சேரி என்றால் ஏன் அவ்வளவு கூட்டம் கூடுகிறது? நேரடியாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துபெறும் அனுபவம் என்பது தனி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால்கூட, உடனடியாக அதை மாற்றிவிடுவார்கள். ஆனால், பொதுக்கூட்டங்களில் இறுதிவரை அமர்ந்து கருத்துக்களை கேட்பார்கள். அப்படியான வசதிகள் பொதுக்கூட்டங்களுக்குத்தான் உண்டு.

இதைத்தாண்டி சமூக வலைதளங்களில் திமுகவின் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்ல தம்பி உதயநிதியின் தலைமையிலான இளைஞரணி பொய்ப்பெட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

முரசொலி நிலம் குறித்த அவதூறுகளை எழுப்புகிறார்கள்; அறிவாலய நிலம் குறித்த அவதூறுகளை எழுப்புகிறார்கள்; கட்சித் தலைவரின் சிறைவாழ்க்கைக் குறித்து அவதூறுகளை எழுப்புகிறார்கள். ஒரு அவதூறை உருவாக்கி, ஒவ்வொரு விவகாரத்தையும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றுவது பெரும் ஆபத்து இல்லையா? அப்படியான நேரங்களில் சர்ச்சைகளுக்கான எதிர்ப்பு வலிமையாக இல்லையே?

அண்ணாவின் பிறப்பைக் குறித்தே அவதூறுகளை எழுப்பியிருக்கிறார்கள். கலைஞரைக் குறித்தும், கலைஞரின் குடும்பம் குறித்தும் இழிவான அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தாண்டித்தான் இயக்கம் வளர்ந்திருக்கிறது. தளபதி மிசாவில் சிறையில் இருந்தார் என்பது சரித்திர உண்மை. நாலு கட்சி மாறிய யாரோ ஒருவர் பேசுவதால் அது மாறிவிடாது. ஆனால், சர்ச்சைகள் எழுப்பப்படும்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் வருகிறது; அந்த நேரத்தில் பதில் சொல்கிறோம்.

கலைஞரின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ‘பேசுங்களேன்... பேசிப்பாருங்களேன்... பேசத்தோற்றவர்கள் நீங்கள்” என்று. அப்படி பேசித்தோற்றவர்கள் தான் அவதூறுகளை பரப்புகிறார்கள். இப்படியான அவதூறுகளை தொழில்நுட்ப வளர்ச்சியே இல்லாத காலத்திலிருந்து, அண்ணா காலத்திலிருந்து நாம் எதிர்கொள்கிறோம்.

சமயச் சிக்கலுக்குள்ளோ, மத விவகாரங்களுக்குள்ளோ தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத ஒரு கட்சி திமுக. பகுத்தறிவு அடையாளம் கொண்ட கட்சி. ஆனால், இன்றைக்கு அரசியல் என்ன சொற்கள் முன்னால் நிற்கிறது என்றால், ‘ஆன்மீக அரசியல்’, ‘இந்து மதத்துக்கு எதிரானவர்கள்’ என்ற முழக்கங்களும், அதற்கான பதில்களும் தான் முன்னால் நிற்கின்றன. இதைத்தாண்டி, கட்சியின் கொள்கை தீவிரத்தன்மையை தக்கவைக்க முடியும் என நம்புகிறீர்களா?

“தி.மு.க மீதான மரியாதை டெல்லியில் உயர்ந்திருக்கிறது” :  திருச்சி சிவா நேர்காணல்! #SPECIALSTORY

மிகச்சிறந்த கேள்வி இது. பலருக்கும் இந்த சந்தேகம் எழும். திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்ததே, இந்த நிலப்பரப்பில் உள்ள அனைத்து மக்களுக்குமான கட்சி திமுக என்பதால்தான். ‘திராவிடர்கள்’ என்ற இனத்துக்குரியவர்களுக்கு பணியாற்ற திராவிடர் கழகம் இருக்கிறது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அனைத்து மக்களுக்குமான கட்சி. கட்சித் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இந்த கொள்கையோடுதான் நாம் பயணிக்கிறோம்.

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்துவிட்டார் என்று அண்ணாவிடம் கேள்வி கேட்டபோது அண்ணா சொன்னார், “நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என்று. அதுதான் நம்முடைய கொள்கை. ஆக அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் கொள்கையிலும் மாறவில்லை; எங்கள் இயக்கத்தின் லட்சியமும் மாறவில்லை; எங்கள் கொள்கையும் நீர்த்துப்போய்விடவில்லை.

அடுத்த ஒருவருடம் தேர்தல் பரபரப்புக் காலம். முதல்வர் பதவியையொட்டி பெரும் பந்தயம் நடக்கிறது தமிழ்நாட்டில். நான்காவது முறையாக உங்களுக்கு மாநிலங்களை உறுப்பினர் பொறுப்பை ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதை நோக்கிய தி.மு.கவின் பயணத்தில் உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்கப்போகிறது?

தளபதி தமிழ்நாட்டின் முதல்வர் என்பது நாட்டின் தேவை !. அது காலத்தின் கட்டாயம். இன்று இருக்கின்ற ஆபத்துகளிலிருந்தும், பிரச்னைகளிலிருந்தும் நாட்டைக்காக்க ஆற்றல்மிக்க ஒரு தலைவர் தேவை. அப்படிப்பட்ட ஒரே தலைவராக தளபதி மட்டும் தான் இருக்கிறது. அவரை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கான களத்தில் லட்சக்கணக்கான கழக வீரர்களில் ஒருவனாக நிற்கிறேன் நான்.

- விவேக் கணநாதன்

Related Stories

Related Stories