தி.மு.க

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98

பேராசிரியரின் உரைவீச்சு சித்தாந்தத்தையே முன்வைக்கும். இயக்கத்தின் வரலாற்றை-நோக்கத்தை-தேவையை-சவால்களை அவர் அடுக்கிக்கொண்டே போகின்ற முறை கொள்கை வகுப்பு போல இருக்கும்.

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட இயக்கத்தை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள், விமர்சனங்கள், தாக்குதல்கள் இவை எதுவுமே புதியதல்ல. அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இத்தகைய கேள்விகள் தொடர்வதும் அவற்றிற்கு, பதில் தருவதும் வழக்கமாகிவிட்டது. கேட்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவனுக்கு வந்த அதே சந்தேகம், இந்த ஆண்டு சேர்ந்த மாணவனுக்கும் ஏற்படும். முதலில் கேள்வி கேட்ட மாணவர் கல்லூரிக் காலத்தைக் கடந்திருப்பார். ஆனாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் மாணவர்களும் அதே கேள்வியைக் கேட்பார்கள். மாணவர்கள் மாறிக்கொண்டே இருந்தபோதும், அவர்களின் கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம் தெளிவானது, உறுதியானது, உண்மையானது. காரணம், அந்த விளக்கத்தை வழங்கியவர், பேராசிரியர்.

தி.மு.க. பொதுச்செயலாளரான இனமான பேராசிரியர் அன்பழகனாரின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றும் திராவிட இயக்கத்தின் தத்துவத்தை விளக்கக்கூடியதாக இருக்கும். தேர்தல் நேரத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாநாடு என்றாலும் பொதுக்கூட்டம் என்றாலும் அதிலும் அவருடைய உரைவீச்சு சித்தாந்தத்தையே முன்வைக்கும். இயக்கத்தின் வரலாற்றை-நோக்கத்தை-தேவையை-சவால்களை அவர் அடுக்கிக்கொண்டே போகின்ற முறை கொள்கை வகுப்பு போல இருக்கும்.

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98

ஒவ்வொரு செய்தியையும் தெளிவாக விளக்கியவுடன், ‘இன்னுஞ் சொல்லப்போனால்’ என அவர் கொடுக்கின்ற அழுத்தமும், அதனைத் தொடர்ந்து அவர் வைக்கின்ற வாதங்களும் அதில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் மேடையில் உள்ள தலைவர்கள் முதல் எதிரில் நிறைந்திருக்கும் தொண்டர்கள் வரை அனைவருக்கும் இயக்க உணர்வினை ஊட்டிடும்.

நெடிய பொதுவாழ்வுக்குரிய பேராசிரியர் அவர்கள் 98ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது சொற்பொழிவுகளை காணொளியாகவும், ஒலித்தொகுப்பாகவும், சிறுசிறு அச்சு வெளியீடாகவும் கொண்டு வரும் முயற்சி தொடங்கப்பட்டால் அதுவே அவரது பிறந்தநாளுக்குரிய சிறப்பான பரிசாக அமையும். இன்றைக்கும் சுற்றிச் சுழலும் வெற்றுக் கேள்விகளுக்கு தக்க பதிலாக அமையும்.

2010ஆம் ஆண்டில் திராவிட ஆய்வு மையத்தை தொடங்கி வைத்து பேராசிரியர் ஆற்றிய உரையிலிருந்து...

“நாம் தமிழர் என்று சொல்லும்போது கிடைக்காத உரிமையும், பெருமையும்- திராவிடர் என்ற சொல்கிறபோது கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எதற்காக தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்ற பெயர் இருந்தால் போதாதா?என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன ஒரு விளக்கம்-நம் மீது ஆதிக்கம் செலுத்திய-செலுத்துகின்ற பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன்; பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடன்.

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98

இன்னும் சொல்லப்போனால், சைவ சமய சார்புள்ளவர்களிடமெல்லாம் நான் அன்போடு பழகக்கூடிய வாய்ப்பு பெற்றிருக்கின்ற காரணத்தால், எதற்கு இந்த திராவிடர்? ஆதிதிராவிடரோடு உங்களை சேர்த்துவைத்துக் கொள்வதிலே என்ன பெருமை உங்களுக்கு? என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு மேடையிலே சொன்ன பதில்: ஆதிதிராவிடன்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவனோடு சேர்ந்தால்தான் எங்களுடைய உரிமையும் பாதுகாக்கப்படும் என்று சொன்னேன். மனிதத் தன்மையைக் காப்பாற்ற அதுதான் வழி; தீண்டாமையை ஒழிக்க அதுதான் வழி; வரலாற்று மறுமலர்ச்சிக்கு அதுதான் வழி என்று அன்றைக்குச் சொன்னேன்.

பிரம்மாவின் முகத்திலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன், பாதத்திலே பிறந்தவன் சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? முகத்தைத்தானே மதிக்க வேண்டும். தொடையை அவன் மதிப்பானா? அது வேறு காரியத்திற்கு ஆக.அதனுடைய விளைவு என்ன? மற்றவன் எல்லாம் மனிதனல்ல என்பதுதானே.

பார்ப்பனியத்தின் செல்வாக்கிற்காகவே சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.தமிழ்மொழி போல பிறந்தமொழி என்னும் சிறப்பு வட மொழிக்குக் கிடையாது. வடமொழி செய்யப்பட்டது. பல மொழிகளிலே இருந்து கடன் வாங்கி செய்யப்பட்ட மொழி. வெளிநாட்டிலேயிருந்து நூல் வாங்கி, இங்கு நெசவு செய்யப்படுவது போல் கடன் வாங்கப்பட்ட மொழி. அது பிச்சைக்காரன் பாத்திரம்.

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98

கால்டுவெல்தான் தமிழ்மொழி ஒரு தனிமொழி, தென்னாட்டு மொழிகள் ஒரு தனி குடும்பம், அந்தக் குடும்பம் ஆரியக் குடும்பம் அல்ல; அந்தக் குடும்பம் திராவிட குடும்பம் என்பதை எடுத்து நிலைநாட்டியவர் .அதனுடைய தாக்கம்தான் மனோன்மணீயம் சுந்தரனார் நீராரும் கடலுடுத்த என்ற பாடலை பாடினார்.

ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்திடா உன்சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று மனோன்மணீயம் சுந்தரனார் பாடினார். தமிழன் என்ற மானஉணர்வோடு பாடினார். இன்னும் சொல்லப் போனால், அவர் ஓர் இறைப் பற்றாளர். இறைப் பற்றாளருடைய மனதிலே இந்த வேதனை எப்படிப் புகுந்தது என்று கேட்டால் இறைவனைப் பாடுவதற்கு நம்முடைய தமிழிலே இடம் இல்லை. வடமொழிக்குத்தான் அந்தச் சிறப்பு உண்டு என்று சொல்லுகின்றார்களே, அந்த மொழி செத்துப் போய்விட்டது என்று சொல்லுகின்றார்.அதே உணர்வு மறைமலை அடிகளுக்கு இருந்தது; ஏறத்தாழ அதே உணர்வு கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு இருந்தது. நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கு இருந்தது. அந்த உணர்வைக் கொண்டு சென்ற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. தந்தை பெரியார், அண்ணா அதற்காகப் போராடினார்கள்.

“இன்னும் சொல்லப்போனால்...” - திராவிட இயக்கத்தின் தத்துவத்தை முழங்கிய குரல்! #பேராசிரியர்98

பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் நீதிக்கட்சி, பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆக இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம் அதை அரசியல் துறையிலே நிலைநாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

எனவே அந்த அடிப்படையிலே தமிழர் என்பதால் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் உரிமை பெறுகிறேன்.”

கட்டுரையாளர் : கோவி.லெனின்

banner

Related Stories

Related Stories