தி.மு.க

தி.மு.க பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பும் மாரிதாஸ் : காவல்துறையில் புகார்!

தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு வீடியோ வெளியிட்ட வரும் மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பும் மாரிதாஸ் : காவல்துறையில் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

“மாரிதாஸ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை சமூக வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழிநடத்துவதிலும் அவர் மிகவும் திறமையானவர் எனத் தெரிகிறது.

அவர் இயக்கிவரும் ஃபேஸ்புக் பக்கம், யூ-ட்யூப் சேனல் மற்றும் வலைத்தளம் ஆகியவற்றை அவதூறு பரப்பும் குப்பைத் தொட்டியாகவும், போலிச் செய்திகள் மற்றும் பிரிவினைவாத கருத்துகளைப் பரப்புவதற்கான நிலையமாகவும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று, மாரிதாஸ் தனது யூ-ட்யூப் சேனலில் “தி.மு.க தடை செய்யப்படவேண்டுமா?” என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான கருத்துகள். சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கம் கொண்டவை.

ஒரு பெரிய திரை முன்பு நின்றபடி, உலகளாவிய புவி அரசியலைப் பேசும் அறிஞர் போன்ற தோற்றத்தை உருவாக்கும் மாரிதாஸ், பொது அமைதியை குலைப்பதையும் பகைமையை ஊக்குவிப்பதையும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே வெறுப்பைத் தூண்டுவதையுமே விரும்புகிறார் என்பது வீடியோவைப் பார்த்தால் தெளிவாகிறது.

தி.மு.க பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பும் மாரிதாஸ் : காவல்துறையில் புகார்!

தி.மு.க வெளியிட்ட சமீபத்திய கொள்கை அறிக்கைகளைப் பயன்படுத்தி, இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

அந்த காணொளியில் அவர் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் :

1. சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான தி.மு.கவின் நிலைப்பாடு ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உள்ளது.

2. தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தை குறைத்து, தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது.

3. தி.மு.க இதற்காக பாகிஸ்தானில் இருந்து பணம் பெறுகிறதா? அல்லது தி.மு.க-வே பயங்கரவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுகிறதா?

மேற்குறிப்பிட்ட அவரது கருத்துகள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவை தவிர வேறொன்றுமில்லை. மாரிதாஸ் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புகிறார்.

இதற்குக் காரணம், காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தில் தி.மு.க எடுத்துள்ள நிலைப்பாடு பா.ஜ.க அரசுக்கு எதிரானது. “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது ஜனநாயக விரோதமானது; அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது” எனச் சுட்டிக்காட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

மேலும், காஷ்மீர் மாநிலம் குறித்து எந்தவொரு முடிவெடுப்பதற்கு முன்னரும் காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் நிலைப்பாடு. காஷ்மீர் இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தி.மு.க தெரிவித்த ஆதரவு மாரிதாஸ்களால் வேண்டுமென்றே தவறாகக் கருதப்படுகிறது. அதனாலேயே மாரிதாஸ், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து, அதன் மூலம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்.

தி.மு.க பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பும் மாரிதாஸ் : காவல்துறையில் புகார்!

சமூக வர்ணனையாளர் என தன்னைத்தானே அவர் கூறிக்கொள்வது உண்மையானால், தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல; அவரது முதன்மை நோக்கம் பொய்களைப் பரப்புவதும், தன்னைப் பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்துவதும் தான்.

ஆதாரமற்ற, பொய்யான தகவல்களை வெளியிட்டு பிரிவினையைத் தூண்டுவது இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 505 (2)-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.இப்படி, வெவ்வேறு வகுப்பினருக்கிடையே, வெறுப்பை விளைவிக்கும் வகையில் பொய்களை உருவாக்கிப் பரப்பி வரும் மாரிதாஸுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். இருப்பினும், மாரிதாஸ் போன்ற சமூக ஊடக குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கையில் இது போதுமானதாக இருக்காது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் கீழ் இவர்களைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கையைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் மாரிதாஸ் தனது வலைதள பக்கத்திற்காக, ‘Sudesi Awake & Arise Movement’ மூலம் நன்கொடை வசூல் செய்வதாகவும், அதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் அளித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்பி சமூக அமைதியைக் குலைக்கும் செயலுக்காக அவர் அப்பாவிகளிடமும் நன்கொடை பெறும் அபாயமும் உண்டு. இதற்காக, அவர் ரிசர்வ் வங்கியிடமிருந்தோ அல்லது அரசு நிறுவனங்களிடமிருந்தோ பணம் வசூலிக்க அனுமதி பெற்றாரா என்பதும், இது தொடர்பாக அவர் உரிய ரசீதுகளை வழங்கியிருக்கிறாரா என்பதும் தெளிவில்லை.

எனவே, அவர் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதியைக் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories