சினிமா

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளான ஜீலை 13 கவிஞர்கள் திருநாளாக ஒவ்வோராண்டும் வெற்றித் தமிழர் பேரவையினரால் கொண்டாடப்படுகிறது.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் கிராமத்தில் பிறந்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தான் எழுதிய முதல் கவிதை நூலானா ‘வைகறை மேகங்கள்’ மூலம் கண்டெடுக்கப்பட்டவர், ஒரு எழுத்தாளருக்கான அங்கீகாரம் என்பது முதுமையில் தான் கிடைக்கிறது எனும் வாய்மொழிகளை பொய்யாக்கிக்காட்டிய மாயக்காரர் இன்று தன் பேனாவின் உதவியால் பொன்விழா காணும் கவிப்பேரரசு வைரமுத்து.

நாவலாசிரியராய், உலகத் தமிழ் மேடைகளில் உலாவரும் வீரியமிக்க சொற்பொழிவாளராய், பத்மஸ்ரீயாய், பத்மபூஷணாய், ஆறு ஜனாதிபதிகளிடம் ஏழுமுறை விருதுபெற்றவராய் இதற்கு முன் ஒரு பாடலாசிரியர் இவரைப் போல் சாதித்ததில்லை என்னும் புகழுகளுக்கு உரியவர் கவிப்பேரரசு வைரமுத்து. கல்லூரியில் படிக்கிறபோதே தங்களது படைப்பு மற்றொரு கல்லூரியில் பாடநூலாக வைக்கப்பட்ட பெருமைக்குரியவர்கள் இரண்டு பேர். ஒருவர், இலக்கிய விமர்சகர் வே.மு.பொதியவெற்பன். மற்றொருவர், கவிஞர் வைரமுத்து. திரைப்பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் வைரமுத்துவின் இலக்கியப் பயணம் அரை நூற்றாண்டைத் கடந்திருக்கிறது.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

கவிதைகளின் மீதும் தமிழின் மீதும் இவருக்கு இருந்த காதல் பணத்தின் பின்னும், புகழின் பின்னும், நிறந்தர வருமானம் தரும் வேலையின் பின்னும் இவரை செல்லவிடாமல் வைரமுத்துவை தமிழின் தீவிர இலக்கியவாதியாக இருக்க செய்தது. அதன் விலைவு வைரமுத்து விட்டுவிலகிய பேராசிரியர் பணி, தலைமைச் செயலகப் பணிகளில் கிடைக்காத பெரும் நிம்மதியை தேடிக்கொடுத்தது. கூடவே பெரும் புகழுக்கு கவிஞரை சொந்தமாக்கியது. ‘நட்பு’ உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு வைரமுத்துவும் கதை வசனம் எழுதியிருக்கிறார். என்றாலும், பல லட்சம் கிடைக்கும் வசனகர்த்தா வாய்ப்பைத் தவிர்த்துப் பாடலாசிரியராகவே தனது பயணத்தை திரையுலகில் அமைத்துக்கொண்டார்.

எழுத்து வடிவான இலக்கியங்களான கவிதைகள், நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிப்பெயர்ப்பு, சுயசரிதை என அனைத்திலும் கவித்துவம் நிரம்பியோடும் ஒரு தனித்துவமான நடையையே அவர் தனது முத்திரையாக்கிக் கொண்டார். எதுகை மோனைகளைக் கவனமாகத் தவிர்த்து, எழுவாய் பயனிலைகளை இடம்மாற்றிப் போட்டு உரைநடைக்குள் கவிதையை வசப்படுத்த முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், இவர் ஏன் சிற்றிலக்கிய காலகட்டத்தில் உறைந்துபோயிருக்கிறார் என்று கேட்டவர்கள் உண்டு. ஆனால், நாவல் வடிவத்தை கேள்விக்குள்ளாக்கியவர்கள் காவியங்களை நோக்கி நகரும் இன்றைய காலகட்டத்தில் தான் வைரமுத்து சிற்றிலக்கிய கால நடைகளில் உறைந்து போயிருப்பது அவரின் தனியடையாளம் என்பது புலப்படுகிறது.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

நவீனக் கவிஞர்கள் தமிழ்க் கவிதை மரபைத் தகவல்களாகவேனும் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால், புலவர் மரபின் கடைசிக்கண்ணி வைரமுத்து என்பது சந்தேகமில்லை. வைரமுத்துவின் கவிதைகள் நீண்ட நெடிய புலவர் மரபின் தொடர்ச்சியாக அமைந்தவை. நூற்றுக்கணக்கில் சங்கப் பாடல்களும், தனிப்பாடல்களும், சிற்றிலக்கியங்களும் நினைவில் இருக்கும் ஓர் புலவனாகவே அவர் பேனா பிடிக்கிறார். பாரதிதாசனுக்குப் பிறகான மரபுக் கவிதைகளிலிருந்து ஒரு தேர்ந்தெடுத்த தொகுப்பை உருவாக்கினால், அவரது ‘வைகறை மேகங்கள்’, ‘என் பழைய பனை ஓலைகள்’ இரண்டும் இல்லாமல் அதை நிறைவுச்செய்ய முடியாது. அதே வேலையில் நவீன கவிதைகளின் தொகுப்புகளிலும் வைரமுத்துவின் கவிதைகளை தவிர்த்துவிட முடியாத காரணத்தினால் தான் வைரமுத்து மரபுக்கும் புதுமைக்குமான பாலமாகவே கருதப்படுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் புலவர் மரபில் மட்டுமல்ல புதுக்கவிதைக்குள் மக்கள்மொழியை எளியநடையில் அவரளவிற்குப் பயன்படுத்தியவர்கள் ஒரு சிலரே, இது கவிதை நடைகளில் மட்டுமல்ல திரைப்பட பாடல்களிலும் தான். 1980ல் இயக்குனர் மகேந்திரனின் ‘காளி’ படத்தில் ‘காளி பத்ரகாளி’ எனும் பாடலை இளையாராஜாவின் இசையில் ரஜினிக்கு எழுதி தனது திரையுலக பயணத்திற்கு வெற்றித்திலகமிட்டுக் கொண்ட வைரமுத்து தொடர்ந்து நான்கு தலைமுறை இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என அயராது பணியாற்றி 7500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். 1980ல் இயக்குனர் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் இவர் இயற்றிய ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடல் இவருக்கு முதல் தேசிய விருதினை பெற்று தந்தது. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி-ன் மெல்லிய குரலில் எளிய தமிழில் நடையில் அமைந்த இந்த பாடல் இந்த கள்ளிக்காட்டு கவிஞனை தேட வைத்தது.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

வைரமுத்து - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் முதல் பாட்டு “ சின்னச் சின்ன ஆசை”. கவிஞரின் ‘பொன்மாலைப் பொழுது’ எப்படிப் பரபரப்பாகப் பேசப் பட்டதோ, அதுபோலவே ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலும் கவிஞருக்கு இரண்டாம் தேசிய விருது பெற்றுத் தந்து இமாலய வெற்றி பெற்றது. “தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தைகளின் உதடுகளிலும் தவழும் புதிய குழந்தைப் பாடலாக அழகுடனும் அர்த்தமுடனும் எளிமையுடனும் இப்பாடல் விளங்குகிறது என தேசிய திரைப்பட விழுதுக் குழுவினரால் அப்போது பாராட்டப் பெற்றது.“கடந்த 10 ஆண்டுகளில் வெளியான தமிழ் சினிமாப் பாடல்களில் இதுவே தலைசிறந்தது” என்று அன்று இயக்குநர் கே.பாலசந்தர் புகழ்ந்து பேசிருந்தார். சென்னைக்கு வந்த தமிழறியாத ஒரு ஜப்பானிய இசைக் குழுவால் இப்பாடல் பாடப்பட்ட பெருமையும் உண்டு. மேலும் மலையாளத்தில் வைரமுத்து சிறுகதைகள் நூலை வெளியிட்ட எம்.டி.வாசுதேவன் நாயர் அப்போது, வைரமுத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’ என்ற வரி கற்பனையின் உச்சமாகும். என புகழ்ந்து பேசிருந்தார்.

திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர்தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை வென்றவரும் இவர்மட்டும்தான். எண்ணிலடாங்க விருதுகள் எழுதி ஓயாத பாராட்டு மடல்கள் என வைரமுத்துவின் புகழும் பாராட்டுகளும் ஏராளம். கவிஞர் கண்ணதாசன் போல பல அரச பட்டங்களைச் சூடிக்கொண்டாலும் உண்மையில் வைரமுத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைத்தான் பின்தொடர்கிறார். நாணத்தில் ஒடியும் குலமகள் ராதைகளுக்கிடையே ‘கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ’ எனக் கேட்கும் அந்த வீறார்ந்த குரலை வைரமுத்துவின் பாடல்களில்தான் அதிகமும் கேட்க முடிகிறது. குறிப்பாக, கிராமத்துச் சூழலில் அமைந்த பாடல்களில் ஆண்களுக்குச் சமமாக ராங்கிகளும் வம்பிழுக்கிறார்கள். முறைப்பெண்டிருக்குப் பேச்சில் நூல்விட்டுப் பார்க்க அனுமதி உண்டுதானே? வைரமுத்துவின் பெரும்பாலான காதல் பாடல்களில் இந்தக் கூறைப் பார்க்க முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஓர் சமத்துவ உரையாடலை அவர் சாத்தியமாக்கியிருக்கிறார். (சிநேகிதியே பாடல்)

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

அதேபோல் பெண்களின் அழகையும் அவர்களின் வலிகளை தன் பாடல் வரிகளில் வைரமுத்து அளவிற்கு வெளிப்படுத்தியவர் வேறொருவர் இல்லை, ‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகை வர்ணித்து இவர் இயற்றிய ‘அன்பே அன்பே’ பாடலாகட்டும், ‘சங்கமம்’ படத்தில் தன் காதலின் பிரிவை ஏற்கமுடியாது வாடும் பெண்ணின் துயரத்தை ‘மார்கழி திங்கள் அல்லவா’ பாடலில் வெளிப்படுத்தியது என பல பாடல்களில் பெண்களின் பக்கம் இருந்து கவிஞர் உருவாக்கிய வரிகளுக்கும் இந்நாளும் மதிப்பு குறையவில்லை. இவரின் வரிகளில் உருவான பாடல்களில் ஷாருக்கான் நடிப்பில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான ‘உயிரே’ படத்திற்கு இன்னும் எத்தனை காலமானாலும் உயிரிருக்கும். அந்த படத்தில் இவர் இயற்றிய தைய தையா துவங்கி என் உயிரே வரை அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். காதலை உணர்த்தும் நெஞ்சினிலே, அதன் வலியை உணர்த்தும் பூங்காற்றிலே, காதலின் இன்பம் கலந்த துன்பத்தை வெளிப்படுத்தும் சந்தோஷ கண்ணீர் என படத்தின் கதையோடு காதலை விதைக்கும் முயற்சியை ஏ.ஆர். ரகுமானின் துணையோடு பாடல்களில் செய்துவந்தவர் கடைசி பாடலான ‘என் உயிரே’-வில் காதலின் ஏழு நிலைகளை எடுத்துச்சொல்லி காதலில் ஒரு புரிதலை கொடுத்திருப்பார்.

பாலிவுட்டை விடவும் தமிழில் ‘தில் சே’ படத்தின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் ரயிலில் ஒரு பாடல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது ‘தைய தையா’ தான். இதனால் மற்ற மொழி கவிஞர்கள் வைரமுத்துவை கண்டு சற்று கலக்கம் கொண்டது குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. ஒரு முறை பிரபல இந்திக் கவிஞர் குல்சார் ஒரு விழாவில் “நாங்கள் இருவரும் திரைப்பாடல் எழுதுகிறோம், வைரமுத்து என்னை விடச் சிறப்பாக எழுதுகிறார். வசியப்படுத்தும் வார்த்தைகளால் திரையுலகை வைரமுத்து ஆட்டிவைக்கிறார். என்னால் அது இயலாது. அவர் இந்தியில் எழுத வந்தால் என்னவாகும் என்ற கற்பனையே எனக்கு அச்சம் தருகிறது” என்றார், மற்றொரு இந்தி மொழிக் கவிஞர் டாக்டர் பல்தேவ் வன்சி “கவிஞர் வைரமுத்துவின் பிரபஞ்சப் பார்வை, பின் நவீனத்துவ யுகத்தின் வீச்சுடன் பிரதிபலிக்கின்றது. புதுப்புதுக் கற்பனைகள், நவ நவமான உவமைகள் பிம்பங்களின் புதுமையான பிரயோகங்கள் கவிஞரின் திறனை நன்கு வெளிப்படுத்துகிறது” என பாராட்டினார். “வைரமுத்துவின் சிந்தனைகளை இந்தியில் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வளவு உயரத்தில் வைரமுத்து சிந்திக்கிறார்” ஜீன்ஸ் படத்திற்கு இவர் எழுதிய ‘ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான் ’ என்ற வரியை இந்தியில் எழுதும்போது ‘ஒற்றைக் கால் தவம்’ என்ற வைரமுத்துவின் கற்பனையை இந்தியில் கொண்டுவர முடியாது என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டாராம் இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். முரண்தொகைகள், உவமைகள், வழக்குச் சொற்கள் என்று வைரமுத்து தான் எழுதும் மொழியின் அபார முகிழ்வுகளைக் கவித்துவத்தின் ஒரு துளியேனும் சேர்த்து, தான் எழுதும் எந்த ஒரு வடிவத்திலும் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீரா ஆவல் கொண்டவர்.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

2003இல் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி’ விருதுக்குத் தேர்வு பெற்றது. இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மான்’ விருதும் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்நாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்று அழைத்தார். அந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ‘காப்பியக் கவிஞர்’ என்று குறித்தார். 1999இல் ‘பெய்யெனெப் பெய்யும் மழை’ கவிதை நூல்வெளியீட்டு விழாவில் அந்நாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் அளித்தார்.

கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளான ஜீலை 13 கவிஞர்கள் திருநாளாக ஒவ்வோராண்டும் வெற்றித் தமிழர் பேரவையினரால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கவிஞருக்குக் கவிஞர்கள் திருநாள் விருதாக பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்கி வருகிறார். கவிஞரின் திருத்தி எழுதிய தீர்ப்புகள் நூலிலிருந்து வைரமுத்து சிறுகதைகள் வரை அவருடைய பெரும்பாலான படைப்புகள் பிரம்மாண்ட வெளியீட்டு விழாக்கள் கண்டவை. முதல்வராக இருந்தபோதும் இல்லாதபோதும் கலைஞரால் வெளியிடப்பட்டவை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இதுவரை கவிஞரின் 17 நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவருடைய படைப்புகள் ஆங்கிலம் - இந்தி – தெலுங்கு - கன்னடம் – மலையாளம் - உருது - வங்காளம் – ரஷ்யன் – நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை – நாவல் – சிறுகதை – திரைப்பாட்டு – ஆராய்ச்சிக் கட்டுரை – திரை உரையாடல் – பயணக் கட்டுரை – சரிதை – சுயசரிதை என்று இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் இவரது பயணம் நீண்டுகொண்டேயிருக்கிறது.

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள்: அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து!

இவரைப் போல் ஒரு கவிதையை யாரும் எழுதிவிடலாம். ஒரு இயக்குநர் அனுமதித்தால், அவரைப் போல ஒரு பாட்டையும்கூட எழுதிவிடலாம். ஆனால், அவரைப் போல ஒரு கவிஞனாகத் தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. பாரதிதாசன் பெருவிருப்பத்தோடு திரையுலகில் நுழைந்தார். அந்த நிழலுலகின் நடைமுறைகளில் மனம் ஒவ்வாது சோர்ந்து திரும்பினார். வைரமுத்து அதே சிக்கல்களை இன்னும் பெரிய அளவில் எதிர்கொண்டுதான் ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். பாரதிதாசன் தனது தொடர்ச்சியாக ஒரு அறிவியக்கத்தையே உருவாக்கிவிட்டுப் போனார். வைரமுத்துவோ தன்னந்தனியாகவே நடக்கிறார்; அதற்கு மேல் அவர் உருவாக்கியிருக்கும் மன்றம் ரசிகர் கூட்டம்தான். தமிழ்ப் புலவர் மரபு, பாடல்கள் இயற்றுவதோடு பாடஞ்சொல்லிக் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தது. எழுதிய கவிதைகளால் மட்டுமில்லை, மொழிக்கு அவன் கொடுத்துச் சென்ற கொடையும், உருவாக்கிச் சென்றிருக்கும் அறிவுப் பரம்பரையையும் சேர்த்தே ஒரு கவிஞன் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறான். ஆனால், காலம் இன்னும் மிச்சம் இருக்கிறது!

banner

Related Stories

Related Stories