சினிமா

“இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!

தன்னோடு சேர்த்து தான் சார்ந்த தெலுங்கு சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தது ராஜமௌலியின் வித்தை.

 “இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜமௌலி... இந்தப் பெயர் இந்திய சினிமாவைக் கடந்து எப்போதோ ஒலிக்கத் துவங்கிவிட்டது. பிரமாண்டத்தை தனது படங்களைத் தாண்டி அதன் வெற்றியிலும் பங்குகொள்ளச் செய்த, இந்தக் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள். அவரது சினிமா பயணம் பற்றியும், தன்னோடு சேர்த்து தான் சார்ந்த தெலுங்கு சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்ததையும் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

அப்பா விஜயேந்திர பிரசாத் தெலுங்கு திரையுலகில் கதாசிரியர், சித்தப்பா எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளர் என வீட்டிலேயே சினிமாவுக்கு நெருக்கமான இரண்டு நபர்களைப் பார்த்ததாலோ என்னவோ ராஜமௌலிக்கும் சிறுவயதிலிருந்து சினிமா மேல் காதல். அப்போதிருந்தே தனக்குத் தோன்றும் கதைகளை கீரவாணியிடம் சொல்ல ஆரம்பித்தார். காமிக்ஸ், கதைப் புத்தகங்கள், நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், அவர் சொல்லும் கதைகள் பெரும்பாலும் ஃபேன்டசி கதைகளாகவே இருக்கும்.

இனி சினிமாதான் என முடிவு செய்து கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எடிட்டர் கோத்தாகிரி வெங்கடேஷ்வர ராவிடம் வேலைக்குச் சேர்ந்தார். இவர்தான் இப்போது வரை ராஜமௌலி இயக்கும் அத்தனை படங்களுக்கும் எடிட்டர். ஒரு வருடத்துக்குப் பிறகு சென்னையில் ஏ.வி.எம் ஒலிப்பதிவுக் கூடத்தில் வேலை. பிறகு தந்தை விஜயேந்திர பிரசாத்திடமே உதவியாளராக வேலை. ஏற்கெனவே கதை சொல்லலில் கெட்டிக்காரராக இருந்தவருக்கு, தந்தையின் சார்பாக பல இடங்களுக்குச் சென்று கதை சொல்லிய அனுபவம் இன்னும் பலமான கதை சொல்லியாக உதவியது.

 “இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!

எப்படியும் இயக்குநராகிவிட வேண்டும் என்கிற கனவோடு கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்தவருக்கு, இயக்குநர் ராகவேந்திரா ராவிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்கள், சீரியல் என ராகவேந்திரா பணியாற்றியதிலெல்லாம் ராஜமௌலியும் அசுரத்தனமாக வேலைபார்த்தார். அந்த உழைப்புக்குப் பரிசாக சிலவற்றை அவரே இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த சமயத்தில், ஜூனியர் என்.டிஆர் தன்னுடைய முதல் படமான ‘நின்னு சூடாலனி’ தோல்வியை மறக்கடிக்கும் ஒரு ஹிட் கொடுக்க வெறியுடன் காத்திருந்தார். அவரது இரண்டாவது படத்துக்கு திரைக்கதை, ராஜமௌலியின் குரு ராகவேந்திர ராவ். அந்தப் படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது முடாபள்ளி. ஆனால், அவர் சீரியலில் பிஸியாக இருந்ததால் வாய்ப்பு ராஜமௌலிக்கு வந்து சேர்ந்தது. அப்படி உருவான படம்தான் `ஸ்டூடெண்ட் நம்பர் 1’.

படம் வெளியாகி அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் ஹிட். இருந்தும் அந்தப் படத்தை இயக்கியது ராஜமௌலி என யாரும் ஒப்புக்கொள்ளவே இல்லை. ராகவேந்திரா ராவ்தான் படத்தை இயக்கியிருக்கிறார் என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி துவங்கி கடைக்கோடி ரசிகன் வரை ராஜமௌலியின் முதல் வெற்றி மீது அவநம்பிக்கை பூசினார்கள். பளிச் அடையாளம் தரவேண்டிய முதல் வெற்றியே பெரும் பாரமாக மாறியதில்தான் ராஜமௌலியின் சினிமா என்ட்ரியே நிகழ்ந்தது.

 “இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!

விருப்பப்பட்டது போல இயக்குநர் ஆகி, படமும் ஹிட்டாகி எந்தப் பிரயோஜனமும் இல்லாது போன வருத்தம் ராஜமௌலிக்கு. போதாதற்கு, `சிம்ஹாத்ரி’ படம் துவங்கப்பட்டு, இரண்டு முறை ட்ராப் ஆனது. ஒன்றரை ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ராஜமௌலியை, அப்போது மாஸ் ஹீரோவாக உருவாகிவிட்ட ஜூனியர் என்.டி.ஆர் அழைத்தார். தனக்கு முதல் பட தோல்வியைத் துடைத்து வெற்றி படியில் ஏற்றிவிட்ட ராஜமௌலிக்கு தயாரிப்பாளரை கைகாட்டி ”கதை சொல்லுங்க... படம் பண்ணலாம்” என்றார். `சிம்ஹாத்ரி’ உருவானது, ரிலீஸாகி கொலமாஸ் ஹிட்டானது.

முதல் படத்தின் வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்த அத்தனை பேரும், “யாருய்யா இவரு இப்படி படம் பண்றாரு?” என தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். இதன் பிறகும் அவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட்தான். மூன்றாவதாக இயக்கிய `ஷை’ படத்திலிருந்து “an SS Rajamouli film” டைட்டிலில் குத்தப்பட்ட முத்திரையின் ஜொலிப்பு இப்போதுவரை கூடிக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிரகாசமும் மொழிகள், நாடுகள் கடந்து உலகம் முழுக்கவே பரவியிருக்கிறது.

மேலோட்டமாக ராஜமௌலி என்றதும் பலருக்கும் வரும் வார்த்தை அவர் தெலுங்கு சினிமாவின் ஷங்கர் என்பதோ, பிரமாண்ட இயக்குநர் என்பதோவாகத்தான் இருக்கும். ஆனால், ராஜமௌலி அதிலிருந்து விலகி தான் ஒரு யுனிக் க்ரியேட்டர் என நிரூபித்திருக்கிறார். தான் சொல்ல நினைத்த கதைகளுக்கும், செய்ய நினைத்த சினிமாக்களுக்கும், சினிமாவையே பயன்படுத்தி மேலெழுந்த அவரது பயணமே அதை நிரூபிக்கும். முதல் படமான `ஸ்டூடண்ட் நம்பர் 1’ மீது எந்த உடன்பாடும் இல்லை என்றாலும், தன்னுடைய என்ட்ரிக்காகவும், தன் குருவின் மீதிருந்த மரியாதைக்காகவும் செய்தது. அடுத்தடுத்த படங்கள் மூலமாக மிகப்பெரிய ஒன்றுக்காக தன்னை தயார் செய்து கொண்டார் என சொல்லலாம்.

Courtesy : Releaseday.com
Courtesy : Releaseday.com

`சிம்ஹாத்ரி’, `சத்ரபதி’, `விக்ரமார்குடு’ மூன்று படங்களிலுமே  மாஸ் மொமண்ட் + எமோஷன் காட்சிகளின் பேலன்ஸ் சரியான விதத்தில் இருக்கும். `எமதொங்கா’, `மகதீரா’ போன்ற படங்களில் அதிகம் பேசப்பட்டவற்றில் விஷுவல் எஃபக்ட்ஸும் முக்கியமான ஒன்று. `மரியாதராமண்ணா’, `ஈகா’ இரண்டிலும் இருக்கும் ரிஸ்க்கை கணக்கில் கொண்டு ஒற்றுமைப்படுத்தலாம்.

அதாவது `மரியாதராமண்ணா’வில் சுனில் போன்ற ஒரு காமெடி நடிகரை நாயகனாக வைத்து படம் எடுப்பது ஒரு ரிஸ்க், `ஈகா’வில் ஒரு ஈயை வைத்து கதை சொல்லி ஆடியன்ஸை கட்டிப் போட வேண்டும் என்பது மிகப்பெரிய ரிஸ்க். இரண்டிலுமே ஜெயித்தார். இவை எல்லாம் சேர்ந்து `பாகுபலி’ எனும் பிரமாண்டத்தை எழுப்ப ராஜமௌலிக்கு ஆடுகளமாக இருந்ததை கவனிக்க முடியும். இது ஒரு இயக்குநராக அவருக்கு அவரே செய்து கொண்ட நன்மைகள். சினிமாவுக்கு?

சினிமாவுக்கும் செய்திருக்கிறார். ஆடியன்ஸை தியேட்டருக்கு வரச்செய்தது + படங்களின் வணிகத்தை விரிவுபடுத்தியது. இந்த இரண்டும் ராஜமௌலியின் மிகப்பெரிய சாதனைகளாக அடித்துச் சொல்லலாம். சரியாக `எமதொங்கா'வில் இருந்து ராஜமௌலி படங்களை எல்லாம் தியேட்டரில் சென்று தரிசிக்க வேண்டிவைகளாக உருவெடுத்தது.

 “இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!


யோசித்துப் பாருங்கள், மகதீராவின் 100 பேரை ஒற்றை ஆளாக அடித்து துவம்சம் செய்யும் பார்த்திபனின் அதகளத்தையோ, பாகுபலியின் விதவித அரண்மனைகளையும், அருவிகளையும், அட்டகாசமான போர்க்கள காட்சிகளையும், மொபைல் ஸ்க்ரீனிலோ, டிவி ஸ்க்ரீனிலோ பார்த்தால் முழுமையான திருப்தி கிடைக்குமா? எனவே, அதை தியேட்டரில் பார்ப்பது ஆடியன்ஸுக்கான கட்டாயமாக மாறும். `ஜுராசிக் பார்க்’கில் Steven Spielbergக்கும், அவதாரில் James Cameronனும் செய்த அதே ஃபார்முலாதான். ராஜமௌலி செய்தபோதும் அது ஒர்க்-அவுட்டானது. இந்த விஷுவல் வசீகரங்கள் மூலம் டிக்கட் கவுன்ட்டர் வரை அழைத்து வரும் ராஜமௌலி, படத்திலும் ஆடியன்ஸை எந்த விதத்திலும் சோதிக்காத கதையை, மாயாஜாலமான திரைக்கதையில் சொல்லி அசரடிப்பதையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டாவது வணிகத்தை விரிவுபடுத்துவது. `ஷை’ தவிர்த்து 2010 வரை ராஜமௌலி இயக்கத்தில் உருவான அத்தனை படங்களும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. `ஈகா’விலிருந்து அந்தப் பொறுப்பையும் அவரே எடுத்துக் கொண்டார். தமிழ், தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்ட `ஈகா’ சைனீஸ் வரை கூட டப் செய்யப்பட்டு அங்கும் பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பியது. `பாகுபலி’யில் அந்த வியாபாரம் இன்னும் பலமடங்கு விரிந்தது. பல நாடுகளில் நேரடி ரிலீஸ் நடந்து வசூல் ஒரு பக்கம், ஹாலிவுட் பத்திரிகைகளே படத்தைக் கொண்டாடி எழுதும் விமர்சனங்கள் ஒரு பக்கம் என வேற லெவல் மாஸ் பண்ணியது. தெலுங்கில் இப்போது சின்னச் சின்ன படங்கள் மூலம் அசரடிக்கும் இயக்குநர்கள் எவ்வளவு ஆரோக்யமான விஷயமோ, அதே அளவு முக்கியம்தான் ராஜமௌலி போன்ற இயக்குநர்களின் படங்களும்.

 “இந்திய சினிமாவுக்கு என்ன செய்தார் ராஜமௌலி?” - பிரம்மாண்ட இயக்குநரின் பிறந்ததின சிறப்பு பகிர்வு!

இங்குதான் நமக்கு இந்திய சினிமா என்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி இன்னபிற எல்லாம். கடல் தாண்டிவிட்டால் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டும்தான். முக்கால்வாசி நாடுகளில் இந்தியாவில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வருகிறது என்கிற தகவல் கூட தெரியாது.

இந்த நிலைமையை மாற்ற நம்முடைய திறமைகளை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்து வைப்பது மிக அவசியம். அந்த வேலையை ராஜமௌலி தொடர்ச்சியாக செய்வார் என்பதை எந்தத் தயக்கமும் இன்றிச் சொல்லலாம். இதோ அடுத்து செய்து கொண்டிருக்கும் RRR படத்தில் என்ன இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்கிறார்களே, அதுவே இவரது சாதனைக்கு சாட்சி இல்லையா?

வாழ்த்துகள் ராஜமௌலி... அசத்துங்க!

banner

Related Stories

Related Stories