சினிமா

நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ : மறைந்தும் வாழும் நடிகர் திலகம்! 

இன்று ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பிறந்தநாள். சிவாஜி நடித்த ‘வசந்தமாளிகை’யின் டிஜிட்டல் வெர்சன் தற்போது 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ : மறைந்தும் வாழும் நடிகர் திலகம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோடிகளில் எடுக்கப்படும் பிரம்மாண்ட திரைப்படங்கள் கூட வெளியாகி சில தினங்களில் தடம் தெரியாமல் போய்விடும் நிலையில், 47 ஆண்டுகள் கழித்தும் மக்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக மாறியிருக்கிறது ‘வசந்த மாளிகை’. 1972ல் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ, வி.கே.ராமசாமி, குமாரி பத்மினி, சகுந்தலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். எட்டு பாடல்கள் கொண்ட இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

அன்றைய காலத்திலேயே 750க்கும் மேற்பட்ட நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபமாக பழைய கிளாசிக் படங்களை டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அப்படி சிவாஜியின் வசந்தமாளிகை திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஜூன் 21ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் வெளியாகி ஒரு நல்ல வசூலையும் பெற்றது. அன்றைய சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் கூட சிவாஜியின் நடிப்பை ரசிக்க வசந்த மாளிகை படத்தைப் பார்க்க திரையரங்கில் குவிந்தனர்.

தற்போது டிஜிட்டல் முறையில் வெளியான இப்படம் நூறு நாட்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில திரையரங்குகளில் இன்றும் ரசிகர்கள் வசந்த மாளிகை திரைப்படங்களை கண்டு ரசித்துவருகின்றனர். குறிப்பாக, இன்றும் சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் 3.00 மணி காட்சிக்கு வசந்த மாளிகை திரையிடப்படுகிறது என்பது கூடுதல் தகவல். காதலாகி, காதலால் உருகும் திரைப்படங்களின் பட்டியலில், வசந்தமாளிகையை தவிர்த்திட முடியாது.

நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ : மறைந்தும் வாழும் நடிகர் திலகம்! 

இந்தப் படம் எல்லோர் மனதையும் வென்றதற்கு இரண்டு விஷயங்கள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். ஓர் அழகு தேவதை, ஆணின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறாள்... என்ன ஆனாலும் அவளையே நினைத்து உருகும் ஹீரோவின் மனநிலை மற்றும் காட்சிப்பொருளாக இல்லாமல் சுயமரியாதையும், நேர்மையும் கொண்ட வைராக்கிய பெண்ணாக நாயகி வாணி ஸ்ரீ... ஆரஞ்சு வண்ணப் பட்டுப்புடவையையும், வெளிர்நிற வெள்ளைக் கோட்டில் சிவாஜியையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.

இப்படியான, வசந்த மாளிகை பற்றிய மற்றுமொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், இப்படத்தின் ஒரிஜினல் 1971ல் வெளியான தெலுங்கு திரைப்படமான பிரேம நகர். இப்படமே தமிழில் ரீமேக்கானது. தவிர, படத்தின் கதையாசிரியர் கௌசல்யா தேவ் எனும் தெலுங்கு பெண் எழுத்தாளர். இதுமட்டுமல்ல, திரைக்கதை குறித்தும், சிவாஜி நடிப்பு குறித்தும் பேச எத்தனையோ விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. எனவே, வசந்த மாளிகை என்றென்றும் கிளாசிக் சினிமா தான்.

ஏற்கெனவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' போன்ற படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, 'வசந்த மாளிகை' திரைப்படமும் டிஜிட்டலில் வெளியாகி நூறு நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்திருப்பது நிச்சயம் சாதனையே.

banner

Related Stories

Related Stories