சினிமா

“தமிழின் சினிமா இவரிலிருந்து தொடங்குகிறது...” :பாரதிராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்! 

கேமரா ஃப்ரேமிற்குள் மனிதர்களை இழுத்துவந்த சினிமாவை மாற்றி, மனிதன் வாழும் இடத்திற்கெல்லாம் கேமராவைக் அலையவைத்த பாரதிராஜா பிறந்தநாள் இன்று.

“தமிழின் சினிமா இவரிலிருந்து தொடங்குகிறது...” :பாரதிராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் சினிமா 1930-களிலேயே தொடங்கியிருந்தாலும், 'தமிழின் சினிமா' 1977-ல் தான் தொடங்குகிறது. அப்போதுதான் பாரதிராஜா எனும் கலைஞன் ‘பதினாறு வயதினிலே’ என்று சொல்லி அறிமுகமாகிறான்.

"நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை கைபிடித்து வயல்காட்டிற்கு அழைத்துச் சென்றவர்" என்று கூறுவது வெறும் பெருமைமொழி அல்ல. உறவுச் சிக்கலை மட்டுமே பேசிக்கொண்டிருந்த சினிமாவை, உணர்வுப் பாதையில் அழைத்துச் செல்ல அவருக்கு அந்த களம் தேவைப்பட்டது. கேமரா ஃப்ரேமிற்குள் மனிதர்களை இழுத்துவந்த சினிமாவை மாற்றி, மனிதன் வாழும் இடத்திற்கெல்லாம் கேமராவைக் அலையவைத்தவர் அவர். அதன்பின் அதுவே தமிழ் சினிமாவின் இலக்கணமாகிப் போனது நாம் பெற்ற வரம்.

பதினாறு வயதினிலேவைத் தொடர்ந்து 78-ல் அவர்தந்த 'கிழக்கே போகும் ரயில்' தமிழகக் கிராமங்களில் காதல் உறவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை தண்டவாளக் கதையாக்கியது‌.

அடுத்தடுத்து கிராமம் சார்ந்த கதைகளை எடுத்ததும் பாரதிராஜா கிராமங்களுக்கான இயக்குநர் என்று கூறினர். 78-லேயே அதற்கு பதிலாய் அவர் தந்தது 'சிகப்பு ரோஜாக்கள்'. பின்னாட்களில் தமிழில் வந்த 'மூடுபனி’, ‘காதல் கொண்டேன்’, ‘மன்மதன்’, ‘நடுநிசி நாய்கள்' என பல படங்களில் சிகப்பு ரோஜாக்களின் தாக்கம் இருந்தது.

“தமிழின் சினிமா இவரிலிருந்து தொடங்குகிறது...” :பாரதிராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்! 

1980-ல் வெளிவந்த 'நிழல்கள்', 81-ல் வந்த 'டிக் டிக் டிக்' போன்றவை பாரதிராஜாவிற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கே புதுமையான முயற்சிகள்.

தமிழகத்தின் 80-களை பாரதிராஜா மொத்தமாகவே குத்தகை எடுத்துக்கொண்டார். உண்மையில் 80-கள் பாரதிராஜா தன் கலைக் காதலியை திருமணம் செய்த சமயம். 'அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘மண்வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது' என தமிழ் உலகு தனக்கான சினிமாவைக் கண்டுணர்ந்தது.

இன்னும் 'கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘அந்திமந்தாரை, தாஜ்மஹால்’, ‘கடல்பூக்கள்' என அவர் எடுத்த ஒவ்வொரு படத்திற்கும் தமிழகம் புரண்டு புரண்டு படுத்தது. 'என் இனிய தமிழ் மக்களே' என பாசமாக திரைப்படத்திற்கு அழைத்து ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு காதலை களமாக எடுத்து ரசிகர்களை விதவிமாக குற்றவுணர்வு கொள்ளச்செய்தார்‌.

வைரமுத்து, பாக்யராஜ், மணிவண்ணன் எனத்தொடங்கி எண்ணிலடங்கா கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளுக்கான தமிழ் சினிமா கதாநாயகிகள் பெரும்பாலும் இவர் பட்டறையில் வளர்ந்தவர்கள்.

பாரதிராஜாவின் வெற்றி என்பது அவர் நினைத்த எல்லாவற்றையும் திரையில் நிகழ்த்திக்காட்டியதுதான். தன்னால் இதைச் செய்யமுடியவில்லை என்று எதையும் விட்டுவைக்கவில்லை அவர். இந்த வெற்றி அரிதினும் அரிதாகவே படைப்பாளிகளுக்குக் கிடைக்கக்கூடியது.

தமிழ் சினிமா என்றைக்கேனும் தான் அடுத்து செய்யவேண்டியது என்ன என்ற குழப்பநிலைக்கு வந்தால் பதில் சொல்பவை பாரதிராஜாவின் படைப்புகளாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories