சினிமா

மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வு, பள்ளிகள் மூடல் - புதிய கல்விக் கொள்கை தவறானது : சூர்யா வருத்தம்

எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும் என்று நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வு, பள்ளிகள் மூடல் - புதிய கல்விக் கொள்கை தவறானது : சூர்யா வருத்தம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்தார்.

விழாவில் பேசிய சூர்யா, “ புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை தவறானது. பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர்.

ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களால் எத்தனை நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்க முடியும். எங்கு போய் படிப்பார்கள். நாடு முழுவதும் சமமான கல்வி முறை இல்லை. சமமான கல்வியைக் கொடுக்காமல் நம்மால் எப்படி கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.

நாம் இப்போது நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட நுழைவுத்தேர்வு என்று புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். நுழைவுத் தேர்வை வைத்து தனியார் பயிற்சி நிறுவனங்கள் தான் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர்” என சூர்யா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories