சினிமா

“மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

“காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது” என ஒரு மாபெரும் வாழ்வியல் தத்துவத்தையே எளிதாகப் பாடலில் வைக்கிற சூட்சுமம் அறிந்தவர் அவர்.

 “மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மில்லினியம் கொடுத்த குறிப்பிடத்தக்க நன்மைகளுள் பெருங்கொடை நா.முத்துக்குமார். கிட்டத்தட்ட தமிழர்களின் கால் நூற்றாண்டை தன் பாடல்களால் நிரப்பியவர் அவர். அவரது பாடல்கள் பலருக்கு வாழ்வு குறித்த நம்பிக்கை விதைகள் தெளித்தன; வரிகள் பலருக்கு வாழ்க்கை கொடுத்தன; பலரைக் கண்ணீர் உகுக்கவைத்தன. தமிழ் திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவனாக இருந்த அந்தக் கவிஞன் தன் ஆயுளில் பாதியைக் கழிப்பதற்குள்ளாகவே மறைந்தான்.

மிக இளம் வயதில் மரணமெனும் வேட்டைக்குச் சிக்கிக்கொண்டாலும், வயது வித்தியாசமின்றி வகைமை பேதமின்றி எல்லாத் தரப்பினருக்குமான சொற்களைக் கையளித்துச் சென்றுள்ளார் முத்துக்குமார். எல்லா வகை உணர்வுகளோடும் நம் நிகழ் வாழ்வைக் கடத்தத் தேவையான பாடல்கள் அவரிடத்தில் இருக்கின்றன. ஆற்றாமையை, துயரத்தை, பிரிவை, ஏகாந்தத்தை, இன்பத்தை, கூடலை, காதலை, கொண்டாட்டத்தைப் பாடுகிற பாக்கள் அவரது பேனாவிலிருந்து வடிந்தபடியிருக்கின்றன.

ஒரு பத்து - ஐம்பது பாடல்களைப் பட்டியலிட்டு இதெல்லாம் சிறந்ததென பட்டியலிடக்கூடியதா முத்துக்குமாரின் வரிகள்? மகளுக்கான அன்போடு ஒப்புமைப்படுத்த வானத்து நிலவைத் தன் பக்கத்தில் வைத்து வார்த்தைகளால் அளந்த கவிஞனல்லவா?

திரையிசைக்கு அறிமுகமான சீமானின் ‘வீரநடை’ படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் ‘முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’ என்று அவரது பெயருடனே தொடங்கும். அந்தப் பாடலில் பல உவமை, உருவகங்களைக் கையாண்டார். இன்று வரை தமிழ்த் திரைப் பாடல்களில் அதிக உவமை, உருவகங்களைக் கையாண்டு எழுதப்பட்ட பாடல் அதுதான். இப்படியான, அசாத்தியங்களை எந்த அலட்டலும் இல்லாமல் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தது அந்தக் கவிஞனின் விரல்கள். அந்த மென்சோகப் புன்னகை முகங்கொண்ட கவிஞன்தான் அத்தனை ரசித்து ரசித்துப் பெண்ணைப் பாடினான்.

 “மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

தமிழும், சொல்லும், அணியும் அவரது தலையாட்டலின் கட்டளைக்கேற்ப வளைந்து கொடுத்தன. இலக்கிய ஆற்றலை ஒருபுறம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பாடலுக்குமான வெர்சலிட்டியைக் காட்டிக்கொண்டே இருந்தார் முத்துக்குமார். 'இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா" பாடிய அவரது ராகம்தான் 'ஹார்ட்டிலே பேட்டரி' எனப் பீப்பி ஊதியது.

தன் ஏழ்மை குறித்துத் தந்தை அவருக்குச் சொன்ன வழிமுறையையே பாடலாக்கி “கூரை ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே...” என அசத்தலான வரிகளை அவரால் கொடுக்க முடிந்தது. ‘பல்லேலக்கா’வில் பட்டுத்தெறித்த தமிழைத் தான் எத்தனை எத்தனையோ முறைகள் கேட்கிறோமே!

'உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்...' எனும் வரி உலகத்துக் காதலர்களின் விருப்பமொழி ஆனது. ‘கொஞ்சும்போது மழை அழகு; கண்ணாலே கோவப்பட்டால் வெயில் அழகு..!' காதலின் தேசிய கீதம் ஆனது. அவர் காலத்திய காதல்கள் யாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தார் முத்துக்குமார். நா.முத்துக்குமாரின் வார்த்தைகள்தாம் தமிழக இளைஞர்களின் காதல் கடிதங்களை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்தன. அந்த வரிகளுக்கு இல்லை எனச் சொல்ல மனமின்றி ஏற்றுக்கொண்ட காதல்களைக் கணக்கெடுத்தால் அது தேறும் ஆயிரத்துச் சொச்சம்.

தாய்க்கும், தகப்பனுக்கும், சகோதரிக்கும், மகளுக்கும், மகனுக்குமென எல்லோருக்குமான தாலாட்டுப் பாடல்கள் அவரது மடியிலிருந்து பிறந்திருக்கின்றன. இதெல்லாம் யதேச்சையானது அல்ல; தமிழ் கேட்கும் அத்தனை கோடிப் பேரையும் மடியில் போட்டுத் தட்டி உறங்கப் பண்ணியிருக்கிறார் அவர்.

 “மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

டைட்டில் சாங்கோ, பேத்தா சாங்கோ, சூப் பாடலோ, கானா பாடலோ அத்தனையிலும் கவித்துவத்தை ஒரு சிட்டிகை கூடுதலாக வழியவிடுவது இவரது ஸ்பெஷல். பாடலை சாதாவிலிருந்து ஸ்பெஷலாக மாற்றுவது சுவாரஸ்யம் மிக்க அந்தக் கூடுதல் சிட்டிகைதான். அது நா.முத்துக்குமாருக்கு மலையுச்சி அருவிப் பொழிவைப் போல பிரவாகமாகக் கைவந்தது.

திரையிசைப் பாடல்களால் மட்டுமா அவர் ரசிகர் மனங்களை ஈர்த்தார்? கவிதைகளிலும், உரைநடையிலும் நா.முத்துக்குமார் நிகழ்த்தியது அசுரப் பாய்ச்சல். கவிஞன் உரைநடை எழுதுவதில் இருக்கும் நற்பேறுகள் அத்தனையையும் நா.மு-வை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆனந்த விகடனில் முத்துக்குமார் எழுதிவந்த ‘வேடிக்கை பார்ப்பவன்’ தொடரில் இடம்பெறும் காட்சி இது... பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் ஐஸ் விற்ற காசியண்ணனை பிறகொருநாள் பார்த்தபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முத்துக்குமார் பழைய நினைவோடே அவரிடம் சேமியா ஐஸ் கேட்பார். அதற்கு ஐஸ்காரர் 'அதெல்லாம் இப்ப யாரு தம்பி கேட்கிறாங்க? மேங்கோ, ஆரஞ்சு ரெண்டுதான் இருக்கு. உனக்கு என்ன வேணும்?'' என்பார். சரி மேங்கோ குடுங்க என்றதும் தன் முன் இருந்த பெட்டிக்குள் குனிவார் ஐஸ்காரண்ணன். “அந்தப் பெட்டிக்குள், 'காலம்’ கட்டிக் கட்டியாக உறைந்து கிடந்தது!” என்றெழுதினார் முத்துக்குமார். இது ஒரு சோறு பதம்.

இப்படியாக, உணர்வைக் கிளறும் லட்சம் வார்த்தைகள் சமைப்பவர் நா.முத்துக்குமார். மயக்குறும் கற்பனையிலும், சொற் பயன்பாட்டிலும், எளிமையான கட்டுமானத்திலும் உருவாக்கும் அந்த வரிகள் தான் நாம் நினைத்து நினைத்து ஏங்க வகை செய்கிறது. 'அணிலாடும் முன்றில்' என உரைநடையில் உறவுகளின் உணர்வுகளைப் பதிவு செய்தார். 'வேடிக்கை பார்ப்பவன்' மூலம் தன் வாழ்க்கைப் பயணத்தைக் கதையாய்ச் சொன்னார். அவர் இன்னும் இன்னும் கதை சொல்ல, கவிதை எழுத நம்மைத் தாண்டியும் இருந்திருக்கவேணும் என்பதுதான் எப்போதும் தோன்றுவது.

 “மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

நிஜ வாழ்க்கையிலும், கலை வாழ்விலும் எதிர்பார்ப்பு எதையும் கொண்டிராத எளிமையே அவரது அடையாளம். மிகக்கூரிய உணர்வுகளைக் கிண்டவும் அவர் நம்பியது எளிமையைத்தான். “காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது” என ஒரு மாபெரும் வாழ்வியல் தத்துவத்தையே எளிதாகப் பாடலில் வைக்கிற சூட்சுமம் அறிந்தவர் அவர்.

ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்கள். தொடர்ந்து 12 ஆண்டுகள் அதிகப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டவர் முத்துக்குமார், அவர் மரணத்தைத் தழுவிய 2016-ம் ஆண்டு வரை இது தொடர்ந்தது. அரைக்கால் நூற்றாண்டு பாடலாசிரியராக அவர் தான் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.

அவர் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் அவர் வரிகளோடு தமிழ் சினிமா பாடல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது ஒருநாளும் எழுதாமல் உறங்கவில்லை என்கிற அவரது அசாத்திய உழைப்பைச் சொல்வது மட்டுமல்ல; நமக்கான கூடுதல் பலன்.

எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் கைகோர்க்கத் தொடங்கியபிறகு இவரிடம் அதிர்ஷ்டம் அகப்பட்டுக்கொண்டது என்றே சொல்லலாம். யுவனுடன் இணைந்த பாடல்கள் அத்தனையும் வெற்றிகளைக் குவித்தன. முத்துக்குமார் - சினிமா எனும் ஆரவாரமும், அச்சுறுத்தலும் மிகுந்த மாயக்காட்டுக்குள் வழிதவறிய மானின் உடல்மொழியுடன் திரிந்தார். மொழியாளுமையாலும், நவீன கவிதையாக்கல் முறைகளாலும் சிங்கத்தைப் போலத் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார்.

 “மனதின் அடியாழம் தொட்டுத் தூரெடுத்த வரிகள்” - நா.முத்துக்குமார் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

மழைத்துளியைத் தொட்டுணர வேண்டுமானால் மழை தேவையாயிருக்கலாம்; நனைய நா.முத்துக்குமார் போதும். மனதின் அடியாழத்தைத் தொட்டுத் தூரெடுக்கிற வேலையைச் செய்கிற கூர்மிக்கவை நா.மு எழுதிய பாடல்கள். அவரது வார்த்தைகள் ஒரு நல்ல மழையைப் போல அதன் போக்கில் வாதையைக் கழுவுகின்றன. ஒவ்வொரு மழையிலும், வெயிலிலும், வசந்த காலத்திலும் கேட்க - கேட்கக் கேட்கத் தந்துகொண்டிருக்கும் வற்றாத வரிகள் அவரிடம் இருக்கின்றன.

வாழ்வை கொலாஜ் வார்த்தைகளாக்கி இசைக்காட்டில் பதியனிட்டார் முத்துக்குமார். இப்புவியெங்கும் அவரது முகம்போலவே மென்சோகம் அப்பிய டுலிப்ஸ் மலர்கள் பூத்துக் குலுங்கின. அத்தனை மலர்களின் வாசத்திலும் அவரின் சாயல்! ஹெட்போன்களில் குலுங்கிக் கொண்டிருப்பவை எல்லாமும் - முத்துக்குமாரின் சொற்கள்!

அவர் தொடாமல் விட்டுப்போன சொற்கள் தமிழில் மிஞ்சிப்போனால் இன்னும் எத்தனையிருக்கும்? தமிழ் வாழும் வரை அவரது வரிகள் நிலைத்திருக்கும். இசை உள்ள வரை அவரது பாடல்கள் உயிர்த்திருக்கும்.

Related Stories

Related Stories