சினிமா

மூடநம்பிக்கைகளை வித்தியாசமான திரைக்கதையோடு எள்ளல் செய்த படம்! #5YearsOfMundasupatti

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ‘முண்டாசுப்பட்டி’ படம் வந்ததை யோசித்துப்பார்த்தால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது இந்த படத்தின் போஸ்டர்கள்.

மூடநம்பிக்கைகளை வித்தியாசமான திரைக்கதையோடு எள்ளல் செய்த படம்! #5YearsOfMundasupatti
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முண்டாசுப்பட்டி, இன்று ஐந்தாம் ஆண்டின் நினைவில் நுழைகிறது. ஒரு குறும்படத்தை வெற்றிகரமான முழுநீள திரைப்படமாக மாற்றிய பெருமை மட்டுமல்ல; குறும்படத்தில் ஒரு மூடநம்பிக்கையை கதையின் மையப்பொருளாக எடுத்துக்கொண்ட இயக்குநர், அதை முழுநீளத் திரைப்படமாக மாற்றும்போது கிராமங்களில் நிலவும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளை 'ரத்தக்கண்ணீர்' பாணியிலான எள்ளலோடு தகர்த்துப்பேசி, இறுதியில் அந்த கிராமத்திற்கான தீர்வாக ஒரு காதலை முன்வைத்து முடிக்கிறார்.

இயக்குநர் ராம்குமாரின் இரண்டாவது படமான 'ராட்சசன்', அதன் திரைக்கதை அமைப்பிற்காகவே பெறும் வரவேற்பை பெற்றது. அந்தத் துல்லியம் அவரது முதல் படமான முண்டாசுப்பட்டியிலேயே வெளிப்பட்டது. கதை நடக்கும் காலத்தின் அறிவியல் வளர்ச்சியின் உச்சமான கேமராவைப் பார்த்து பயப்படும் மூடநம்பிக்கைதான் படத்தின் ஆணிவேர். அதற்கு முன்னோட்டமாக அந்த கிராமத்தில் விழும் விண்கல் ஒன்றை பயபக்தியோடு கடவுளாக வணங்குவதாக ஒரு கதை காட்டப்படும். (அந்த விண்கல்லிற்கு வைத்த 'வானமுனி' என்ற பெயர் கவித்துவம்) இப்படி ஒரு அறிவியலை வணங்குவதும், ஒரு அறிவியலைப் பார்த்து பயப்படுவதுமான முரண் அழகியலே திரைக்கதை மீதான நம்பிக்கையைத் தருகிறது. அதேபோலான மற்றுமொரு முரண்தான் கேமராவைப் பார்த்து பயப்படும் ஊரிலிருந்து வரும் சினிமா நடிகனாக ஆசைப்படும் முனீஸ்காந்த் கதாபாத்திரம்.

மூடநம்பிக்கைகளை வித்தியாசமான திரைக்கதையோடு எள்ளல் செய்த படம்! #5YearsOfMundasupatti

படத்தின் அடுத்த பலம் நடிகர்கள். விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட் உள்பட படத்தில் நடித்த அத்தனைபேரும் அவரவரின் இயல்பிலேயே கதைக்கும், கதாப்பாத்திரங்களின் தன்மைக்கும் மிக எளிதாக பொருந்திப்போயினர். தனித்துவமாக திகழ்ந்தவர் முனீஸ்காந்தாக நடித்த ராமதாஸ். சினிமா மீதான மோகம் உச்சமடைந்த ஒரு தலைமுறையில் தோற்றவர்களின் பெரும் வலியை கதைக்குத் தேவையான நகைச்சுவையின் வழியாக சற்றே இயல்புக்கு மீறி ஒரு கவிதை மனநிலையிலையே கடத்தியிருந்தார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு அவரது பெயர் பின்னாட்களில் முனீஸ்காந்த் என மாறிப்போனதே சாட்சி.

படத்தில் சிறிது சிறிதாய் ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தபோதிலும், படத்தைப் பற்றி யோசித்தால் முன்னணி கதாப்பாத்திரங்களைத் தாண்டி அந்த சாமியார், விண்கல்லிற்கு ஆசைப்படும் ஜமீன்தாரான ஆனந்தராஜ், கடை வைத்திருக்கும் நபர், பைக்கின் கூடவே ஓடிவரும் சிறுவன் என அத்தனை கதாப்பாத்திரங்கள் நினைவுக்கு வருவதற்கு திரைக்கதை மட்டுமல்ல, நடிகர்கள் தேர்வும் ஒரு முக்கிய காரணம். படத்தின் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்திலிருந்து தேர்ந்தெடுத்தது கூட இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

இவையனைத்தையும் தாண்டி 'முண்டாசுப்பட்டியின்' மிக முக்கிய அம்சம் ஷான் ரோல்டனின் இசை. பாடல்கள் ஒவ்வொன்றிலும் உண்மையிலேயே ஒரு பெரும் தனித்துவம் அமைந்திருந்தது. விவேக் நாராயண் பாடிய 'உச்சியில உதிச்சவனே' உருவான விதத்தில் விருமாண்டி படத்தின் 'அந்த காண்டாமணி' பாடலிடம் நெருங்கி வருகிறது. அத்தனை பிரம்மாண்டம் அந்த பாடலில். ப்ரதீப், கல்யாணி பாடிய 'காதல் கனவே' மழைச்சாரலினூடே தொடங்குகிறது. உண்மையில் மழையின் ஈரம் தரக்கூடிய மிக அழகான மெலடி. 'ராசா மகராசா' டூயட் வெர்ஷன் இருந்தாலும், ஷான் ரோல்டனே பாடிய தனிப்பாடல் வெர்ஷன் படத்திற்கான மொத்த மனநிலையையும் அமைத்துத்தரக்கூடியது. இதைத்தவிர மற்ற பாடல்களும் கவனம் பெற வைத்த பாடல்களே. பின்னணி இசையிலும் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் ஷானிடமிருந்து வெளிப்பட்டிருந்தார்.

இந்த படக்குழுவில் முக்கிய பாராட்டுதலுக்கு உரியவர் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார். ஒரு புதுமுக இயக்குநருக்கு, அதுவும் ஒரு நகைச்சுவைக் கதையை வைத்திருப்பவருக்கு, அதுவும் ஒரு 80-களில் நடக்கும்படியான அதிக செலவைக் கேட்கும் பீரியட் ஃபிலிம் வகைப் படத்திற்கு, இப்படி இன்னும் நிறைய நிறைய பயப்படும்படியான அம்சங்கள் இருந்தும் தைரியமாக படம் தயாரித்ததற்காக பாராட்டலாம். ஆனால் இந்த நம்பிக்கையை குலைக்காமல் படத்தின் முதல் வார இறுதி வசூலே 3 கோடிக்கும் மேல் எடுத்தது இந்தப்படம்.

மூடநம்பிக்கைகளை வித்தியாசமான திரைக்கதையோடு எள்ளல் செய்த படம்! #5YearsOfMundasupatti

உண்மையில் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் வந்ததை யோசித்துப்பார்த்தால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது இந்த படத்தின் போஸ்டர்கள். படத்தின் கதையை அடையாளப்படுத்தும் விதமான போஸ்டர்களே பெரும்பாலும் வந்துகொண்டிந்த நிலையில், மொத்த கதையையும் ஒரு போஸ்டரில் வரைந்தார் 'வின்சி ராஜ்'. போஸ்டர் டிசைன் உலகில் 'வின்சி ராஜ்' வருகை ஒரு மைல்கல். போஸ்டரைப் பார்க்கும் நாம் கேமராவாக இருக்க படத்தின் எல்லா கதாப்பாத்திரமும் தன் முகத்தை மறைத்தபடி இருக்கும் இந்த போஸ்டர் படத்திற்கான முதல் கவனத்தை மிக அழகாக பெற்றுத்தந்தது. சமகாலத்திலேயே கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சித் என அத்தனை முண்ணணி இளம் இயக்குநர்களின் படங்களும் இவர் போஸ்டருடன்தான் வெளிவந்தன.

இவையனைத்தும் இந்த படத்தின் கவனிக்கவைத்த அம்சங்கள் என்றால், நம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாதபடி எந்த இயல்புமீறலும் இல்லாமல் எளிய பட்ஜெட்டில் ரெட்ரோ காலத்தை கண்முன் நிறுத்திய படத்தின் கலை இயக்கம் பெரும் பலமாக அமைந்தது. சத்தியமங்கலத்தின் ஒரு தெருவில் இருந்த அனைத்து வீடுகளும் 100 ஆண்டுகள் பழமையானதாக இருந்ததாகவும், அதை அப்படியே பயன்படுத்தியதாகவும் இயக்குநர் கூறியிருந்தார். இப்படியான படமாக்கும் திறனிற்காகவே திரை ரசிகர்கள் ரசிக்க மட்டுமில்லாமல், சக திரை இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையாகவும் அமைந்தது 'முண்டாசுப்பட்டி'.

- இனியவன்

banner

Related Stories

Related Stories