உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய தலைமை தளபதி கொல்லப்பட்டார்... இஸ்ரேல் அறிவிப்பு !

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 50 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஆண்டு ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து யார் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதை எல்லாவற்றையும் தாண்டி இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகளும், ஈரான் தளபதி ராணுவ தளபதி கோலம் அலி ரஷித் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Also Read: “எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது காப்பாற்றிக் கொள்வீரா?” : பழனிசாமிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி