உலகம்
நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றிய இலங்கை அதிபரின் கட்சி : தமிழர் பகுதிகளிலும் பெருவெற்றி !
இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையின தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டார்.அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். ’
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல்போகும் என்ற காரணத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இலங்கையின் புதிய அதிபர் அறிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் நிலையில், அந்த தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அதில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த அநுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களை பிடித்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில் அநுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி 40 இடங்களிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த தேர்தலில் 142 இடங்களில் வென்ற முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கட்சி இந்த தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
மேலும் தமிழர் பிரதேசங்களில் பொதுவாக தமிழ் கட்சிகளுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் நிலையில், தற்போது அங்கும் அனுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளது. அதிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அனுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சி தமிழர் பகுதிகளில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!