உலகம்
இலங்கை அதிபராக பதவியேற்றார் திசநாயக்கே : விருப்ப வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி ?
இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் நேற்று முந்தினம் (செப்டம்பர் 21) நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். எனினும் இதில் 3 பேர் மட்டுமே பிரதான வேட்பாளராக கருதப்பட்டனர். இலங்கையின் பாரம்பரிய கட்சிகளாக சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், கட்சியைத் தாண்டி வேட்பாளர்களே இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தினர்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சார்பிலும், கடந்த அதிபர் தேர்தலில் 3 % வாக்குகளை பெற்ற அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பாகவும் போட்டியிட்டனர். இவர்கள் மூன்று பேருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் கருத்து கணிப்புகளில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த அநுர குமார திசநாயக்கே, பிரச்சாரம் ஆரம்பித்த நிலையில் முன்னிலை பெறத்தொடங்கினார். வழக்கமாக இலங்கை தேர்தலில் இனவாதம் முக்கிய இடம்பெறும் நிலையில், இந்தத் தேர்தலில் பொருளாதார தேக்கநிலையே முக்கிய இடம்பிடித்தது.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பத்திலிருந்தே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசநாயக்கே முன்னிலை பெற்றார். ஆரம்பத்தில் அதிக இடங்களில் அவர் முன்னிலை பெற்ற நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த சஜித் பிரேமதாசா கூடுதல் வாக்குதல் பெறத்தொடங்கியுள்ளார்.
இதனால் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக்கே ,சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிபர் வேட்பாளர் என்பதை அறிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பிற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் , மூன்றாம் விருப்பமாக அநுர குமார திசநாயக்கே ,சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்துள்ளார்கள் என்பது கணக்கெடுக்கபட்டது.
அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டால், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாக்காளர்கள் செலுத்திய விருப்ப வாக்குகள் அடிப்படையில் இலங்கை அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும் இலங்கை தேர்தலில் வாக்காள்ர்கள் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என மொத்தம் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையுடன் அவர் அதிபராகப் பதவியேற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!