உலகம்

மியான்மர் : இந்திய எல்லையோர நகரை கைப்பற்றிய புரட்சிப் படையினர் - அழிக்கப்பட்ட ராணுவ முகாம்கள் !

மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்த நாட்டில் பல ஆண்டுகளாக புரட்சி படையினர் போராடி வருகின்றனர். சமீபத்தில், 3 கிளர்ச்சிப் படையினர் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி ராணுவத்தின் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய எல்லையின் அருகில் உள்ள சின் மாநிலத்தின் பலேத்வா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக புரட்சி படையினர் அறிவித்துள்ளனர்.

சின் மாநிலத்தில் ஏற்கனவே புரட்சி படைகளின் தளங்கள் செயல்பட்டுவந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை புரட்சிப்படையினர் தாக்கி கைப்பற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து பலேத்வா நகரத்திலும் புரட்சிப்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அந்த நகரம் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக புரட்சி படையினர் தெரிவித்துள்ளனர்.

பலேத்வா நகரில் தற்போது ஒரு ராணுவ கவுன்சில் முகாம் கூட இல்லை என புரட்சி படையினர் அறிவித்துள்ளனர். இந்தியா மற்றும் வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள பலேத்வா நகரத்தில் இந்தியா பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இந்த இடம் புரட்சி படையினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தனது முகத்தை வைத்து வெளியான Deep fake வீடியோ : கடும் எச்சரிகை விடுத்த சச்சின் - அதில் இருந்தது என்ன ?