உலகம்

"56 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் பாலத்தீனர்கள்": ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து - கொந்தளித்த இஸ்ரேல் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த வாரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காசாவுக்கு செல்லும் குடிநீர், உணவுப்பொருள்கள், மருத்துவ பொருள்கள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் அரசு தடுத்து வைத்துள்ளது. மேலும் காசாவில் தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே பாலஸ்தீன்- இஸ்ரேல் விவகாரம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் பேசியபோது, "காசாவில், சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவாக மீறப்படுவதை நாம் கண்டு வருகிறோம். ஆயுத மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை.

பாலத்தீன மக்கள் 56 ஆண்டுகளாக திக்குமுக்காடச் செய்யும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் நிலம், குடியேற்றங்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும், வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும் பாலத்தீன மக்கள் பார்க்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் வளராமல் தடைபட்டுள்ளது; பாலத்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

António Guterres

தங்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிற பாலத்தீன மக்களின் நம்பிக்கை மறைந்து வருகிறது. ஆனால் பாலத்தீன மக்களின் மனக்குறைகள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. பாலத்தீன மக்களுக்கு கூட்டு தண்டனை தரும் திகைக்க வைக்கும் வைக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது." என்று கூறினார்.

ஆனால், அவரின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்து ஐ.நா பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், ஆன்தோனியோ குத்தேரஸ் ஐ.நா.வை வழிநடத்த தகுதியற்றவர் என்று கூறி ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "சேவகம் புரியத் தயாராக உள்ளேன்" : ஆங்கிலேயரிடம் சாவர்க்கர் சொன்னது என்ன ? புட்டு புட்டு வைத்த முரசொலி !