உலகம்

தன்பாலின திருமண சட்டம் எந்த எந்த நாடுகளில் எல்லாம் உள்ளது? : உங்களுக்கான ஒரு பார்வை!

ஒருவர் பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் வளரிளம் பருவத்தில் அவர்களுடைய பாலினத்தில் மாறுபாடு ஏற்படும். அதாவது ஆணாக இருக்கும் ஒருவருக்கு ஆண்மீது தான் ஈர்ப்பு இருக்கும். அதேபோல் பெண் ஒருவருக்குப் பெண் மீதுதான் ஈர்ப்பு இருக்கும்.

காதல் என்றால் அது ஆண், பெண் காதலிப்பதுதான் என்று நமக்கு எல்லாம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதலும் இங்கே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்த 21ம் நூற்றாண்டிலும் தங்கள் காதலை பொது வெளியில் அறிவிக்க முடியாத காலத்தில்தான் இவர்கள் இன்னும் உள்ளனர். நூற்றாண்டுகளுக்கு மேலாக தங்களது உரிமைகளுக்காக இவர்கள் போராடி வருகிறார்கள்.

ஜூன் 28, 1969 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக ஸ்டோன்வீலில் தன்பாலின சேர்க்கை சமுதாய உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. இந்தக் கிளர்ச்சி ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அதுவே பின்னாளில், அமெரிக்காவில் உள்ள தன்பாலின விடுதலை இயக்கத்திற்கு வழிவகுத்தது. இதனால் தன்பாலின சேர்க்கை சமூகத்தினர் ஜூன் மாதத்தைப் பெருமையான மாதமாகக் கருதுகின்றனர்.

ஆனால் அவர்களின் உரிமைகளை இன்னும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருந்து வருகிறது. இவர்களது காதலை பொதுச்சமூகங்கள் வெறுக்கவே செய்கிறது. ஏதோ கொலை குற்றம் செய்தவர்களைப் போலவே இந்த உலகம் இவர்களை இன்னும் பார்க்கிறது.

தன்பாலினத்தவர்கள், சமூகம் விதித்துள்ள கட்டமைப்புகளை உடைத்துக் கொண்டு தங்களது உரிமைகளுக்காக போராடி திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்துள்ளனர். ஆனால் இவர்களது திருமணத்தை சட்டமாக அங்கீகரிப்பதில் பல சிக்கல்களை நாடு முழுவதும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இவர்களது 50 ஆண்டுகால போராட்டத்தால் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கியூபா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் தன்பாலினத்தவர்கள் திருமணத்தை அங்கீகரித்து சட்டமாக இயற்றியுள்ளன.

இந்தியாவிலும் தன்பாலினத்தவர்கள் தங்களது திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்றும் நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தன்பாலினத்தவர்கள் உரிமைகளை வழங்க ஒன்றிய அரசு அமைச்சரவை செயலாளர் தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஜாயிண்ட் வங்கிக் கணக்கு தொடங்குவது, மற்ற சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் இந்த வழக்கு விசாரணையில் போது தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தன்பால் ஈர்ப்பு இயற்கையானதா? - அறிவியல் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? : சிறப்புக் கட்டுரை!