உலகம்

“3ம் வகுப்புக்கு மேல படிக்கக்கூடாது..” பெண்களுக்கு எதிராக தாலிபான் அதிர்ச்சி உத்தரவு: உலக நாடுகள் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்கியதில் இருந்தே பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் ஆடைகளில் இருந்து படிப்பு வரை அனைத்து விஷயங்களிலும் அந்நாட்டு அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தந்தை அல்லது சகோதரன் அல்லாமல் குறிப்பிட்ட வயது பெண்கள் வெளியே செல்லக்கூடாது, பெண்கள் புர்கா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் என்று பல கண்டிப்புகள் இருக்கிறது.

அதுமட்டுமின்றி பெண்கள், ஜிம், பூங்கா உள்ளிட்டவைகளுக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தததோடு, அனைத்து அரசு துறைகளிலும் பணியாற்றும் பெண்களை பணியில் இருந்து அந்நாட்டு அரசு நீக்கி இருக்கிறது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவே தாலிபான் அரசு செயல்பட்டு வரும் நிலையில், உலக நாடுகள் கண்டன குரல்கள் எழுப்பி வருகிறது.

இந்த நிலையில், அவை எதையும் தங்கள் செவிகளில் வாங்காமல் இருக்கும் தாலிபான் அரசு தற்போது பெண்கள் 3-ம் வகுப்புக்கு மேல், அதாவது 10 வயதுக்கு மேல் படிக்க கூடாது என்று புதிய உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்நாட்டின் காஜ்னி பிராந்திய கல்வித்துறை பெண்கள் 10 வயதுக்கு மேல் படிக்க கூடாது என்றும், அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது என்றும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே பெண்கள் அதிகம் படிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு செயல்களை செய்து வரும் நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியிலும், பெண்கள் அமைப்புகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. ஆப்கானில் தாலிபான் அரசு வரும்போது, பெண்கள் கல்வி உரிமைகளுக்கு எந்தவித தடையும் இருக்காது என்று வாக்குறுதி கொடுத்த நிலையில், தற்போது அந்நாட்டு அரசு பெண்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லி மசோதா.. பா.ஜ.கவிற்கு தார்மீக உரிமைக்கூட இல்லை : மாநிலங்களவையில் ப.சிதம்பரம் ஆவேசம்!