உலகம்

லோகோவை மாற்றியதில் இருந்தே தொடரும் சர்ச்சை.. X சின்னத்தை அகற்ற எலான் மஸ்க் உத்தரவு ! காரணம் என்ன ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. மேலும், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றதும் கவனிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க்ட்விட்டரின் அடையாளமாக பல ஆண்டுகளாக நீலக்குருவி இருந்த நிலையில், தற்போது அதனை X என்ற ஆங்கில எழுத்துக்கு எலான் மஸ்க் மாற்றியுள்ளார். மேலும், சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த குருவி நீக்கப்பட்டு அங்கு X என்ற பெயர் பலகை பொருத்தும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில், அனுமதி பெறாமல் புதிய பெயர் பலகை பொருத்தும் பணி மேற்கொள்வதாக கூறி, போலிஸார் அதனை தடுத்து நிறுத்தினர். அதோடு கட்டிடத்தின் மேல் பிரமாண்ட X என்னும் சின்னம் பொறுப்பட்டது. எனினும் அதன் பின்னர் அதனால் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின.

அதிலும் இந்த X சின்னம் சரியாக பொறுத்தப்படாததால் எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழலாம் என கூறப்பட்டது. அதோடு, இதில் பொருத்தப்பட்டுள்ள அதீத ஒளி காரணமாக அருகில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் அந்த X சின்னத்தை அகற்ற எலான் மஸ்க் முடிவு செய்து, அதனை நீக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த X சின்னம் அகற்றப்பட்டது.

Also Read: தைவானுக்கு 345 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி.. அமெரிக்காவுக்கு பதிலடி தரப்படும் என சீனா எச்சரிக்கை !