உலகம்

சிறுவனை சுட்டு கொன்ற போலீசுக்கு ஆதரவு.. கோடிக்கணக்கில் நிதி திரட்டிய அரசியல்வாதி.. பிரான்சில் Shock!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் அருகே கடந்த செவ்வாயன்று நஹேல் என்ற 17 வயது சிறுவன் சாலை விதிகளை மீறியதாகக் கூறி போலிஸார் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குண்டுகள் பாய்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு தற்போது போரட்டம் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், துப்பாக்கியால் சுட்ட போலீசுக்கு ஆதரவாக கும்பல் ஒன்று களமிறங்கியுள்ளது.

தன்னுடைய தாய்க்கு ஒரே மகனான நஹேல் வடஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவர் அல்ஜீரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவராவார். நஹேல், டேக் அவே டெலிவரி டிரைவராக (takeaway delivery driver) பணியாற்றி வந்தார். இந்த சூழலில் கடந்த வாரம், சிறுவன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது அருகே நின்ற போலீஸ் ஒருவர், அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சிறுவன் சாலை விதிகளை மீறியதாகவும், தங்களை மோதும் வகையில் வாகனத்தை ஓட்டி வந்ததாலும் வேறு வழியின்றி சுட்டு கொன்றதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால் இது தொடர்பான வீடியோ வெளியான பிறகு தான் உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது சிறுவனை துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டியுள்ளனர். அப்போது சிறுவன் பயத்தில் அங்கிருந்து கிளம்பும்போது அவரை சுட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ வைரலாகி துப்பாக்கியால் சுட்ட போலீசுக்கு எதிராக பலரும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தொடர்ந்து 8-வது நாளாக அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பிரான்ஸ் போலீசார் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரிடம் இப்படி தான் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, போலீஸ் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் தாய் கண்ணீருடன் தனது மகனுக்கு ஞாயம் கிடைக்கவும் போராடி வருகிறார். இதனால் பிரான்சின் அந்த பகுதி மட்டுமே கலவரமாக காணப்படுகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு பக்கம் இருக்க, தற்போது குற்றம்சாட்டப்பட்ட போலீசுக்கு ஆதரவாக கும்பல் ஒன்று களமிறங்கியுள்ளது. மேலும் சிறுவனை கொன்றதில் தவறில்லை என்று அந்த கும்பல் கூறி வருகிறது.

அதுமட்டுமின்றி அங்கிருக்கும் வலதுசாரி அதிபர் வேட்பாளரான எரிக் ஜெமோருக்கு ஆதரவாக முழு வீச்சில் பிரசாரம் செய்து வரும் அரசியல்வாதியான ஜீன் மெஸ்ஸிஹா என்பவர் Go Fund Me என்ற நிதி திரட்டும் பக்கத்தை ஓபன் செய்துள்ளார். இதுவரை இந்த நிதி திரட்டும் பக்கத்தில் சுமார் 1 மில்லியன் யூரோ, (இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 93 ஆயிரம்) வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைக்கப்பெற்ற நிதியை விட 5 மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பாக ஜீன் மெஸ்ஸிஹா கூறுகையில், "போலீஸ் செய்ததில் எந்தவொரு தவறும் இல்லை. அவர் அவரது வேலையைத் தான் செய்தார். ஆனால், இப்போது அதற்கு அவர் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது" என்றார். போலீசுக்கு ஆதராவாக நிதியளிப்பவர்களுக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து உயிரிழந்த சிறுவனின் பாட்டி கூறுகையில், “அந்த அதிகாரிக்குக் காட்டப்பட்ட ஆதரவைக் கண்டு மனம் உடைகிறது. அவர் என் பேரனின் உயிரைப் பறித்தார். எல்லோரையும் போலவே இவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். எனக்கு நீதி அமைப்பு மீது நம்பிக்கை உள்ளது. நான் நீதியை நம்புகிறேன்.” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Also Read: அடுத்தடுத்து இந்திய தூதரகத்துக்கு தீ வைத்த காலிஸ்தானியர்கள்.. அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம் !