உலகம்
லண்டன் இந்திய தூதரகத்தில் அப்புறப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம் !
கடந்த 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த டிராக்டர் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து, பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் செல்லாமல், தடுப்புகளை மீறி சென்று கலவரத்தை உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கிய நடிகர் தீப் சித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னர் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் தனிநாடு கோரிக்கையான காலிஸ்தான் கோரிக்கை தீவிரம் அடைந்தது.
அதோடு கடந்த மாதம் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பை சேர்ந்த ஒருவரை போலிஸார் கைதுசெய்த நிலையில், துப்பாக்கி ஏந்திய ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 கம்பெனிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று அம்ரித்பால் சிங் கைதுசெய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியானது.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!