உலகம்

திவாலான வங்கி.. உடனடியாக களத்தில் இறங்கிய அமெரிக்க அதிபர்.. தடுக்கப்படுமா உலகளாவிய பொருளாதார பாதிப்பு ?

1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கூட ரூ.17 லட்சம் கோடி வரை சொத்து வைத்து நல்ல நிலையிலேயே திகழ்ந்தது.

ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், பெரிய அளவில் வராகடனில் சிலிக்கான் வங்கி சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், அதன் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.

இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் சிலிக்கான் வங்கியில் தாங்கள் வைத்திருந்த டெபாசிட் பணத்தை எடுக்க திரண்டனர். 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், தற்போது வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அரசு உடனடியாக களத்தில் இறங்கி முதலீட்டாளர்களின் பணத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் அவர்களின் அனைத்து வைப்புத் தொகைகளுக்கும் அணுகவும் வெளியேற்றவும் முடியும் என அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இவ்வங்கிக்கு அவசரகால நிதி வழங்குவதற்கு கட்டுப்பாட்டாளர்கள் புதிய வசதிகள் அமைக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், அமெரிக்க மத்திய வங்கியும் போதிய நிதி உடனடியாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் தோல்விக்கு காரணமானவர்களை முழு பொறுப்பு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலீட்டாளர்களின் பணத்துக்கு உறுதியளிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Also Read: அப்போது சிலிண்டரில் மோடி படம்,, இப்போது விளம்பரத்தில் பாஜக தலைவர்கள் படம்- கிண்டல் செய்த TRS கட்சியினர் !