உலகம்

கடற்கரையோரம் ஒதுங்கிய பெரிய இரும்பு உருண்டை.. வெடிகுண்டா என பொதுமக்கள் பீதி.. ஜப்பானின் பரபரப்பு !

ஜப்பானில் உள்ள ஹமாமட்சு கடற்கரை சுற்றுலாவுக்காக பெயர்பெற்றது. இந்த கடற்கரையில் நடந்து சென்ற பெண் ஒருவர் கடற்கரையில் ஒரு பெரிய இரும்பு உருண்டை ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அதன்பின்னர் இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.

அதன்படி, போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது முதலில் அது கப்பலின் மிதவையாக இருக்கலாம் என கருதி அருகில் சென்றுள்ளனர். ஆனால், அது கப்பலின் மிதவை இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு அவர்கள், இந்த உருண்டை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே இந்த பெரிய இரும்பு உருண்டை குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி அந்த நாட்டு மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இது வெடிகுண்டாக இருக்கலாம் என்றும், சிலர் ஆய்வு கருவியாக இருக்கலாம் என்றும் கூறிவருகின்றனர். அதே போல கற்பனை மிருகமாக காட்ஜில்லாவின் முட்டை என்றும் கூறி வருகின்றனர்.

இந்த இரும்பு உருண்டை சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உருண்டையை சோதனை செய்ததில் உள்ளே எதுவும் இல்லாமல் காலியாக இருக்கிறது என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், தற்போது வரை அந்த இரும்பு உருண்டையின் அருகே பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் முழு தகவலும் அறிந்த பின்னரே பொதுமக்களுக்கு கூறமுடியும் என்றும், அதுவரை பொதுமக்கள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்றும் நகர நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் மகனுடன் வீட்டில் முடங்கிய பெண்.. வெளியே சென்ற கணவருக்கும் அனுமதி மறுப்பு !