உலகம்

மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்.. போலிஸார் தாக்கியதில் கறுப்பின இளைஞர் பலி: அமெரிக்காவில் தொடரும் அராஜகம்!

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இளைஞரான இவர் கடந்த 7ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது போலிஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பிறகு, அவரை தரையில் படுக்கும்படி போலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர். இதற்கு அவரும் தரையில் படுத்து கைகளை மேலே தூக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ஐந்து போலிஸாரும் ஒன்று சேர்ந்துக் கொண்டு அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர்.

அப்போது போலிஸாரின் அடியைத் தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் 'அம்மா அம்மா' என அலறி துடித்துள்ளார். இவரின் அலறல் சத்ததை கேட்காதது போல் போலிஸார் தொடர்ந்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் காயமடைந்த அவரை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிறகு சிகிச்சை பெற்று வந்த நிக்கோலஸ் 10ம் தேதி உயிரிழந்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவங்கள் அனைத்துமே போலிஸார் உடையில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போலிஸார் தாக்கியதில் நிக்கோலஸ் உயிரிழந்துள்ளார். இவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கறுப்பின இளைஞரைத் தாக்கிய ஆறு போலிஸார் மீதும் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போலிஸார் தாக்கியதில் கறுப்பின இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போலிஸாரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு போலிஸார் தாக்கியதில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற இளைஞர் உயிரிழந்தார். இவர் துடிதுடித்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியோகி அமெரிக்கா மட்டுமல்லாது உலகமே அதிர்ச்சியடைந்தது. பின்னர் போலிஸார் அராஜகத்தைக் கண்டித்து அமெரிக்காவில் பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 360 டிகிரி வீரருக்கே இந்த நிலைமையா ? -சூரியகுமார் யாதவை முற்றிலுமாக முடக்கிய நியூஸிலாந்து வீரர் !