உலகம்

ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய FB, Twitter, IT நிறுவனங்கள்: வெளியான அதிர்ச்சி DATA

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று பரவல் குறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்குத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஐ.டி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில்தான் முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த போனஸ் போன்ற சிறப்புச் சலுகைகளை நிறுத்தின. இருப்பினும் பொருளாதார சிக்கலை ஐ.டி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன.

இதன் காரணமாக ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், பைஜூஸ், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் புதிய உரிமையாளராக பொறுப்பேற்ற எலான் மஸ்க், கையோடு அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கும் தங்கள் நிறுவனத்தில் இருந்து 11ஆயிரம் பேரை நீக்கியுள்ளது. இப்படிப் பிரபலமான முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருவது ஐ.டி துறையில் வேலைபார்த்து வரும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது எந்த நிறுவனத்தில் எவ்வளவு ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து டேட்டா ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவு நிறுவனங்களில்,

>> பேஸ்புக்கின் தலைமை நிறுவனம் மெட்டா - 11,000 ஊழியர்கள் (13%)

>> டிவிட்டர் - 3,500 (50%)

>> ஸ்னாப்சாட் - 1200 (20%)

>> இன்டெல் - 20000 (20%)

>> நெட்ப்ளிக்ஸ் - 450 (4%)

>> மைக்ரோசாப்ட் - 1000 ( 0.5%)

>> அமேசான் - 10,000

>> சேல்ஸ்ஃபோர்ஸ் - 2000

இந்திய நிறுவனங்களில்

>> பைஜுஸ் - 2500

>> எட் டெக் - 6898

>> கார்ஸ்24 - 600

மேற்கண்ட அனைத்து டேட்டாக்களும் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்தவையாகும். உலகளவில் உள்ள நிறுவனங்களில் கூட பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மை இந்தியர்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

பணி நீக்கம் குறித்து பங்குச்சந்தை வீழ்ச்சி என நிறுவனங்கள் சமாளித்தாலும், மேலும் பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுகின்றனர்.

Also Read: "இது நடக்கும்வரை ட்விட்டர் அலுவலகத்தில்தான் உறங்குவேன்" - கடும் சிக்கலில் தவிக்கும் எலான் மஸ்க் !