உலகம்

Twitter நிறுவனத்துக்காக சொத்துக்களை விற்பனை செய்யும் எலான் மஸ்க்.. சரியும் பங்குகளில் மதிப்பு !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை எலான் மஸ்க் அறிவித்தார்.

இது தொடர்பான அவர் வெளியிட்ட அறிவிப்பில் "ட்விட்டர் நிறுவனத்துக்கு நாள்தோறும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆட்குறைப்பு செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி தேவைப்படுவதை விட ஊழியர்களுக்கு 50% அதிகமான தொகை வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் ட்விட்டர் ஊழியர்கள் 4 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களுக்கு பணி நீக்க பலன்கள் மற்றும் இதர செலவீனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு பல மடங்கு அதிக தொகை தேவைப்படும் என்பதால் 1 கோடியே 95 லட்சம் டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தை விட எலான் மஸ்க் இனி ட்விட்டருக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பது தெரியவந்துள்ளது. எலான் மஸ்க்ன் இது போன்ற செயல்களால் சமீப காலமாக டெஸ்லா பங்குகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை : விசாரணையில் வெளிவந்த 'பகீர்' தகவல்!