உலகம்

ட்விட்டரில் Blue Tick-க்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்க போகும் எலான் மஸ்க்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களாகவே உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக அ ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார்.

இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.

இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்ட கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்துள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 75% பேரை நீக்கவும் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சதில் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்காகக் கருத வழங்கப்படும் புளுடிக்கிற்க கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அவர் ட்விட்டரை வாங்கும் போதே இந்த பேச்சு அடிபட்டது. தற்போது ஊழியர்களை நீக்கியதை அடுத்தபடியாக புளுடிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி ட்விட்டரில் புளுடிக் கணக்கு வைத்துள்ளவர்கள் மாதந்தோறும் ரூ.1600 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி உள்ளவர்களின் கணக்கில் இருந்து புளுடிக் வசதி நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் புளுடிக் வைத்துள்ள ட்விட்டர் கணக்கர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ஊழியர்கள் நீக்கம், புளுடிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் எலான் மஸ்க். மேலும் ட்விட்டரில் எலான் மஸ்க் என்னென்ன அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நிலையில் அவருக்குப் போட்டியாக புதிய தளத்தைக் கொண்டு வர ஜாக் டோர்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அறுந்து விழுந்த பாலம்.. 132 பேர் தண்ணீரில் மூழ்கி பலி: மனதை பதறவைக்கும் துயர சம்பவம் நடந்தது எப்படி?