உலகம்

"வெள்ளை நிறுத்தவரே பிரிட்டன் பிரதமராகவேண்டும்" -ரிஷி சுனக்கை இனரீதியாக விமர்சித்த ஆளும் கட்சி உறுப்பினர்!

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கடந்த முறை இறுதி சுற்றுவரை முன்னேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்த முறை வெற்றிபெற அதிக வாய்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரிஷி சுனக்கை இனரீதியாக அவரது கட்சியை சேர்ந்த ஒருவரே விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெர்ரி என்னும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர் போரிஸ் ஜான்சனைப்போல ரிஷி இங்கிலாந்தை நேசிக்கவில்லை என்றும், அவர் பிரிட்டனை சேர்ந்தவரே அல்ல என்றும் கூறினார்.

அவரின் இந்த விமர்சனத்துக்கு நிகழ்ச்சி நெறியாளர் ரிஷி சுனிக் பிரிட்டனில் பிறந்தவர் என்றும், ஆனால் நீங்கள் ஆதரிக்கும் போரிஸ் ஜான்சனோ அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு அந்த இனவெறி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் நான், பாகிஸ்தானுக்கோ அல்லது சவுதி அரேபியாவுக்கோ பிரதமராக முடியுமா?இங்கிலாந்தில் வாழ்பவர்களில் 85 சதவிகிதம்பேர் வெள்ளையர்கள், அவர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்தான் தங்களுக்குப் பிரதமராகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.

அவரின் இந்த கருத்தால் ஆத்திரமடைந்த நெறியாளர் நீங்கள் அடிப்படையில் ஒரு இனவெறியர் என நினைக்கிறேன், உங்களுக்கும் மற்ற கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறினார். இந்த விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: india vs pakistan : கிண்டலடித்த பாகிஸ்தான் ரசிகருக்கு google ceo சுந்தர் பிச்சை பதிலடி.. வைரல் ட்வீட்!