உலகம்
காலனி ஆதிக்கத்தின்போது செய்த கொடுமைகள்.. பிரிட்டன் ராணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட முக்கிய கட்சி !
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் மரணம் குறித்து இரு வேறு கருத்துக்கள் பொதுஅரங்கில் பேசப்பட்டு வருகின்றது. பலர் அவரின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து அவரின் பெருமைகளை பேசி வரும் நிலையில், சிலர் காலனியாதிக்கத்தின் போது பிரிட்டன் செய்த கொடுமைகளுக்கு அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படை தன்மையோடு இருக்கவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி ராணி இறந்த துக்கத்தில் தாங்கள் பங்கெடுக்க போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "70 ஆண்டு காலம் இரண்டாம் எலிசபெத் ராணியாக இருந்த பொழுது பிரிட்டன் மற்றும் அவரது குடும்பத்தினரால் உலகெங்கிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பல சந்தர்ப்பத்தில் அவர் அந்த அத்துமீறல்கள் குறித்து பெருமைப்படுபவராக இருந்தார். இதனால் அவர் இறந்த துக்கத்தில் தாங்கள் பங்கெடுக்க போவதில்லை" என்று கூறியுள்ளது.
அதேநேரம் பல்வேறு நாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்களை ராணி இறுதி வரை திரும்ப அளிக்கவில்லை என்றும், பிரிட்டன் பேரரசு செய்த கொடுமைகளுக்கு அவர் இறுதி வரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும் விமர்சனங்கள் சமூகஅரங்கில் எழுந்து வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!