உலகம்

முதியவர்கள்தான் டார்கெட்.. சைபர் குற்றங்களில் இந்தியாவின் நிலைமை படுமோசம்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட FBI!

இணைய வசதிகள் பெருகி வரும் சூழலில் உலகளவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி பலரும் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சைபர் தாக்குதல்கள் மூலம் தனி நபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டு அவை தவறாக பயன்படுத்தப்படும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI - (Federal Bureau of Investigation) சமீபத்தில் உலகில் நடக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு, அது தொடர்பான முடிவுகளை வெளியிட்டது. அதன் அடிப்படையில் வெளியான அறிக்கையில், உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

FBI அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 மற்றும் 2021-க்கு இடையில் சைபர் குற்றங்களால் 18.7 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை பொதுமக்களும் நிறுவனங்களும் இழந்துள்ளனர் எனவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக FBI அமைப்பு மொத்தம் 2,760,044 புகார்களைப் பெற்றுள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சைபர் மோசடியில் முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2021-ம் ஆண்டில் மட்டும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சைபர் மோசடியில் சிக்கி 1.68 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். அதேபோல 50-வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 1.26 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். இந்த பட்டியலில் இளைஞர்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் முதியவர்களுடன் ஒப்பிடும் போது 101.4 மில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர்.

Also Read: “சீனாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு வரும் இந்தியா” - மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம் ?