உலகம்

#5in1_Wolrd அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி.. - உலகின் முக்கிய நிகழ்வுகள்!

1) அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட புயல்

அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தை நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இந்தப் புயலால் லூசியானா கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் தாக்கியதில் அந்த நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் உரை நிகழ்த்தப்படவில்லை. மேலும் இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. தீர்மானம் நிறைவேற ஒன்பது ஆதரவு வாக்குகள் தேவைப்பட்டதால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு சபையால் நிராகரிக்கப்பட்டது.

3) மேடலின் ஆல்பிரைட் காலமானார்

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 1996-ஆம் ஆண்டு மேடலினை வெளியுறவுச் செயலாளராக நியமனம் செய்தார். செக்கோஸ்லோவாக்கியாவை பூர்வீகமாகக் கொண்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. 2012-ல் ஆல்பிரைட்டுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திரப் பதக்கத்தை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4) பெல்ஜியத்தில் இன்று நேட்டோ அவசர உச்சி மாநாடு!

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு நடக்கிறது. 'நேட்டோ' கூட்டமைப்பு நாடுகளின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரசல்ஸ் சென்றார். ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதார தடைகள் விதிப்பது குறித்தும், ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவை பெரிதும் சார்ந்திராமல் இருக்க, நீண்ட கால திட்டம் குறித்தும், உக்ரைனுக்கு அடுத்த கட்ட ராணுவ உதவியளிப்பது பற்றியும் பைடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

5) பராகுவே நாட்டில் கொட்டித் தீர்த்த மிக பலத்த மழை

பராகுவே நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் சான் லோரென்ஸோ நகரமே தனி தீவாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பராகுவே மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: #5in1_World : அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் நீதிபதி - பழைய வீட்டில் கிடைத்த தங்கப் புதையல்!