உலகம்

குண்டுகள் முழங்க போருக்கு நடுவில் திருமணம் - உக்ரைன் காதல் ஜோடிகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியிலிருந்த உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவர்கள் வெளியேறுவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் தடைவிதிக்கவில்லை. இருப்பினும் 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துச் சண்டைபோட வரவேண்டும் என உக்ரைன் நாட்டு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி இரண்டு புறமும் தாக்குதல் நடந்துவரும் நிலையில், உக்ரைன் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுவும் ரஷ்ய ராணுவம் கைவற்றி வரும் கீவ் நகரிலேயே இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.

யாரினா அரீவா மற்றும் சீவியடூஸ்லாவ் பர்ஸின் ஆகிய ஜோடிகள் தான் கீவில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமணம் நடைபெற்ற பொழுது வெளியே துப்பாக்கி சுடும் சத்தங்களும், பீரங்கி, ஏவுகணை சத்தம் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது.

இவர்கள் தங்களின் திருமணத்தை வரும் மே 6ம் தேதி ரஷ்யாவின் வால்டாய் மலைப்பகுதியில் உள்ள டினீப்பர் நதிக்கரையில் வெகு விமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது போர் நடந்து வருவதால் தங்களின் திருமணத்தை எளிமையாகத் தேவாலயத்திலேயே முடித்துக் கொண்டுள்ளனர்.

இத்திருமணம் குறித்து தம்பதிகள் கூறுகையில், "இங்கு நிலைமை மிகவும் கடினமானதாக இருக்கு. நாங்கள் எங்களின் நிலத்திற்காகப் போராடுகிறோம். இதில் நாங்கள் இறந்துவிடலாம். இதற்கு முன்பாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: கைவிரித்த அமெரிக்கா - உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய Hackers : ரஷ்யாவின் இணையதளங்களை முடக்க முயற்சி!