உலகம்

“பாலியல் குற்றவாளியை அவர் சொந்தப் பணத்திலேயே அம்பலப்படுத்தலாம்” : சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது.

அந்தவகையில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை அவருடைய சொந்தப் பணத்திலேயே பொதுவெளியில் விளம்பரப்படுத்தி, அவமானப்படுத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி பகுதியைச் சேர்ந்த யாசர் அல்-அராவி என்பவர், பெண் ஒருவரை ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் தொடுத்த வழக்கு, மதீனா குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த மதீனா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனையும், 1,330 டாலர் அபராதமும் வித்தித்து உத்தரவிட்டார். மேலும் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அந்நாட்டு அரசு கொண்டுவந்த சட்டத்தின் படி, குற்றவாளிகளின் பெயர் மற்றும் தண்டனை விவரங்களை உள்ளூர் நாளிதழ்களில் அவர்களுடைய செலவிலேயே வெளியிடலாம் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார்.

குற்றத்தின் தீவிரம் மற்றும் அதன் மீதான சமூக தாக்கம் ஆகியவைதான் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.

Also Read: "பெண் வீட்டாரிடம் எது வாங்கினாலும் அது வரதட்சணைதான்" : உச்சநீதிமன்றம் அதிரடி!