உலகம்

விவாகரத்து பெற்றதற்கு இப்படி ஒரு தண்டனையா? - இஸ்ரேல் நாட்டு சட்டத்தாக் சிக்கித் தவிக்கும் ஆஸி., நபர்!

நோம் ஹப்பெர்ட் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் இஸ்ரேலைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக நோமை விட்டு பிரிந்து சொந்த நாடான இஸ்ரேலுக்கே குழந்தைகளுடன் குடிபெயர்ந்திருக்கிறார் அந்த பெண்.

ஆனால் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2012ம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்ற நோம் ஹப்பெர்ட் அங்கேயே ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் கெமிஸ்ட் அனலிஸ்ட் பணியில் சேர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில், நோமிடம் இருந்து விவாகரத்து கேட்டு அநாட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் அவரது மனைவி. அப்போது இஸ்ரேல் நாட்டு நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தண்டனைதான் அதிர்ச்சியாக்கியுள்ளது.

விவாகரத்து வழக்கை விசாரித்த இஸ்ரேல் நீதிமன்றம் அந்நாட்டு சட்டப்படி குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 3.34 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 22.74 கோடி) கொடுக்க வேண்டும். மேலும் 18 வயது முடியும் வரை குழந்தைகளுக்காக மாதந்தோறும் 5000 இஸ்ரேல் ஷேக்கல் கொடுக்க வேண்டும் எனவும் நோமிற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதில் என்ன அதிர்ச்சி என்று பார்க்கிறீர்களா? இதற்கடுத்தபடியாக கொடுத்த தண்டனைதான் முக்கியமானது. அதாவது, மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்காவிடில் 9,999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அதாவது 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு இஸ்ரேலை விட்டு நோம் ஹெப்பர்ட் வெளியேறக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.

இதன் காரணமாக 2013ம் ஆண்டு முதல் இஸ்ரேலில் வசித்து வருகிறார் நோம் ஹெப்பர்ட். மேலும் தன்னை போன்ற பல வெளிநாட்டினர் இஸ்ரேல் நாட்டின் விவாகரத்து சட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.