உலகம்

தூங்கிய நிலையிலேயே ஒருவரைக் கொன்ற கொலையாளி விடுவிக்கப்பட்டது ஏன்? - உலகை உலுக்கிய சம்பவம்!

1987ஆம் ஆண்டு மே மாதத்தின் ஒரு நாள் அதிகாலை. கனடா நாட்டின் பிக்கரிங் பகுதி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆளரவம் இல்லை. ஒரே ஒரு வீடு உயிர் கொண்டது.

கென்னித் என்பவர் திடுமென தன்னுடைய படுக்கையில் இருந்து எழுந்தார். அவருக்கு வயது 23. வெளியே சென்று தன் காரில் ஏறிக் கிளப்பினார். எங்கே செல்கிறார் என்பதை அறிந்துகொள்ள அச்சமயத்தில் எவரும் விழிப்பில் இல்லை. அவருக்கே கூடத் தெரியுமா என்பது தெரிந்திருக்கவில்லை.

23 கி.மீ தொலைவுக்கு காரை ஓட்டிச் சென்றார் கென்னித். மனைவியின் பெற்றோர் வசிக்கும் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றார். காரை விட்டு இறங்கியவர், காரிலிருந்து ஒரு பொருளை எடுத்தார். கார் சக்கரங்களிலிருந்து டயர்களை அகற்ற பயன்படும் இரும்புத்தடி. வேகமாக வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றார். நடக்கப் போகும் அசம்பாவிதம் தெரியாமல் அவரது மாமனாரும் மாமியாரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மாமனாரிடம் முதலில் சென்ற கென்னித் அவர் மூச்சைப் பிடித்து திணறடித்தார். எதையும் எதிர்பார்க்காமல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மாமனாருக்கு திடுமென தடைபட்ட சுவாசம் அதிர்ச்சியையும் உயிருக்கான போராட்டத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்தது. போராடினார். பலனில்லை. உடல் துவண்டது. கொடூரம் முடிந்துவிடவில்லை.

கென்னித்தின் கொலைவெறி தீரவில்லை. கையில் வைத்திருந்த இரும்புத்தடியைக் கொண்டு மாமியாரை அடித்தார். ஓர் அடி, இரண்டடி அல்ல. தொடர்ந்து அடித்தார். அதோடு நிறுத்தவில்லை. சமையலறை கத்தி ஒன்றை வைத்து அவர் நெஞ்சில் பல தடவை குத்தினார். அதே கத்தியைக் கொண்டு மாமனாரையும் குத்தினார். ஒரு பெரும் கொடூரத்தை அந்த காலை கண்டு புலர்ந்தது.

படுக்கையறையிலிருந்து ஆறடி தூரத்தில் மாமியாரின் உடல் கிடந்தது. நெஞ்சு, தோள் மற்றும் இதயத்தில் கத்திக்குத்துகள் விழுந்திருந்தன. மூக்கு, கண் மற்றும் தலை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன.

மாமனார் மயக்க நிலையில் கிடந்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. ஆனால் பெரிய அளவில் இல்லை.

ஒரு கொலை. ஒரு கொடூரத் தாக்குதல்.

இவை எல்லாமும் நடந்த நேரத்தில் சமையலறைக்கு சென்று அங்கிருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து கீழே வைத்தார் கென்னித். அழைப்பு வரவும் போகவும் வாய்ப்பில்லை. பரபரவென அலைந்தார். பிற அறைகளில் இருந்த அவர்களின் மகள்களின் அறைகளுக்கு ஓடினார். ஆனால் ஏதோ தோன்றி கதவுக்கு வெளியே சட்டென நின்றார். ஒரு கணம் அமைதி நிறைந்தது. பிறகு கீழே ஓடி வெளியேறி வீட்டை விட்டு அகன்றார்.

கென்னித்துக்கு என்ன கோபம்? மாமனார், மாமியாரை இத்தனை கொடூரத்துக்கு உள்ளாக்குமளவுக்கு அவரை கொண்டு சென்றது எது?

எது எப்படியென்றாலும் ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருந்தது. ஒரு கொலை நிகழ்ந்திருந்தது. அதற்கான விசாரணை முறையாக நடந்து தண்டனையும் கிடைக்க வேண்டும் என்பதே இயல்பாக எவரும் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள்.

கென்னித் விவகாரத்தில் குற்றம் பதியப்பட்டு வழக்கு, விசாரணைக்கு வந்தது. கென்னித் கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆம். கென்னித் விடுவிக்கப்பட்டார்.

கென்னித் கொலையை செய்திருந்தாலும் அவர் சுயநினைவுடன் கொலை செய்யவில்லை என வாதாடியது அவரின் தரப்பு.

சுயநினைவில்லாமல் எப்படி ஒருவர் கொல்ல முடியும்?

தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்ததால் கென்னித் செய்த கொலை அவருக்கே தெரியாமல் நடந்த கொலை என வாதிடப்பட்டது.

நாம் அறியாத விஷயங்கள் குறித்து நிறைய கேள்விகள் நமக்கு உண்டு. அவற்றுக்கான பதில்கள் நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன. அறியும் வரை உண்மைகள் புலப்படுவதில்லை.

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருத்துவம் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது. சோம்னாம்புலிசம்.

தூக்கத்தில் நடப்பது என்பது தூக்கத்தின் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நடப்பதாக அறிவியல் கூறுகிறது.

நாம் தூங்கத் தொடங்கும்போது உடனடியாக தூக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. தூங்கத் தொடங்கி எண்ணங்கள் அலையாடி பிறகு அடங்கி, எந்த எண்ணமும் இன்றி தன்னிலை மறந்து ஒரு நிலையை அடைவோம். அப்போதுதான் ஆழ்ந்த தூக்கம் நேர்கிறது. தூக்கத்தில் நடப்பது என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நேர்வதில்லை. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து மெல்ல மேலெழுந்து விழிப்பை நோக்கி நகர்கிற கட்டம் ஒன்று இருக்கிறது. அதில் விழிப்பு அடைந்துவிடவும் மாட்டீர்கள். விழிப்பு கொள்ள முடியாத ஆழ்ந்த தூக்கத்திலும் இருக்க மாட்டீர்கள். அந்த கட்டத்தில்தான் தூக்கத்தில் நடப்பது அதிகம் நேர்வதாக அறிவியல் கூறுகிறது.

தூக்கத்தில் நடக்கும்போது எவரேனும் கூப்பிட்டால் நமக்கு தெரியாது. யாரேனும் தொட்டால் கூட நாம் திரும்பிப் பார்க்க மாட்டோம். கிட்டத்தட்ட பேய் நிலைதான். உச்சகட்டம் என்னவெனில் தூக்கத்தில் நடந்த விஷயம் நாம் விழிக்கும்போது ஞாபகத்தில் இருக்காது என்பதுதான். என்ன நடந்தது என்பது துளியும் நினைவில் இருக்காது.

தூக்கத்தில் நடப்பதைப் பற்றி எத்தனை விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் தூக்கத்திலேயே ஒருவரை கொல்லும் அளவுக்கு ஒருவர் போக முடியுமா என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை.

தூக்கத்தில் நடந்து சென்று காரை எடுத்து நீண்ட தூரத்துக்கு ஓட்டி ஒரு வீட்டுக்குச் சென்று ஒருவரை அடித்துக் கொலை செய்தெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாத்தியம்தான். அறிவியலுக்கும் ஒவ்வாமல் இருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் சட்டத்துக்கு..?

Also Read: உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம்.. ‘Money Heist’ தொடரின் திரை மறைவில் இருக்கும் அரசியல் என்ன ?