உலகம்

கடும் உணவுப் பற்றாக்குறை.. கிம் ஜாங் உன் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி : வட கொரியாவில் நடப்பது என்ன?

வடகொரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பயிர்கள் சேதடைந்தன. இதனால் தற்போது அந்த நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டு எல்லைகளுக்கு வட கொரியா சீல் வைத்துள்ளது. இதனால் விவசாயத்திற்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவை கிடைக்காததால் தற்போது விவசாய உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்த சீனாவின் எல்லையும் தற்போது மூடப்பட்டுள்ளது.

இதனால் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை இந்திய மதிப்பின்படி 3,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்படிப் பல பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால் மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைந்த உளவில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து வடகொரிய மக்கள் கூறுகையில், "2025ஆம் ஆண்டுவரை மக்கள் குறைவாகவே உணவு உண்ண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும்? இப்போதே உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. இது தொடர்ந்தால் என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இலங்கை நாட்டில் கூட சிலிண்டர் விலை, பால் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது வடகொரியாவிலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து உலகம் முழுவதும் ஒரு பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

Also Read: சிலிண்டர் ரூ.2675 - பால் 1 லிட்டர் ரூ.250... ஜெட் வேகத்தில் உயரும் விலை : விழிபிதுங்கி நிற்கும் இலங்கை!