உலகம்

ஹிட்லரை அவமதித்த இவர் யார்..? உலகப் புகழ்பெற்ற இந்தப் புகைப்படத்தின் பின்னணி தெரியுமா?

1936ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டில் எடுத்த புகைப்படம் இது.

புதிதாக ஒரு கப்பல் ஜெர்மனியின் ஹேம்பர்க் துறைமுகத்திலிருந்து கிளம்பவிருந்தது. ஹிட்லரின் சாதனையாகக் கருதப்பட்ட கப்பல் அது. ஜெர்மனி அரசு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கப்பல் கிளம்பியதும் ஹிட்லருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் கையை உயர்த்தினர், ஒருவரைத் தவிர. அந்த ஒருவர் கூட்டத்துக்கு நடுவே, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டி, ஒரு கண்ணை குறுக்கிக் கொண்டு ஏளனப் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் இந்த கூட்டத்துக்கு எதிரே இருந்த மேடையில் ஹிட்லரும் நின்று கொண்டிருந்தான். ஹிட்லருக்கு எதிரேயே நின்றுகொண்டுதான் இந்த நபர், வணக்கம் வைக்காமல் எள்ளலுடன் நின்று கொண்டிருந்தார்.

புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர்.

1930ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில்தான் ஹிட்லர் மக்களிடம் செல்வாக்கு பெறத் தொடங்கியிருந்தான். பெரிதாக நம்பிக்கைகள் எங்கும் இல்லாத சூழலில், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு ஆதரவு பெருகும். ஹிட்லருக்கும் பெருகியது. வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்த பல இளைஞர்களுக்கு ஹிட்லர் ஒரு மாற்றுச்சக்தியாக தெரிந்தான். ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸருக்கும் தெரிந்தான். ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் ஹிட்லரின் நாஜி கட்சியில் சேர்ந்தார்.

1934ஆம் ஆண்டு ஒரு மாற்றம் நேர்ந்தது. ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் வாழ்வில் வசந்தம் வந்தது. காதல் பிறந்தது. இர்மா எக்ளர் என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் வாழ்வு இனித்து திருமணம் செய்வதற்கு ஆயத்தமாகினர். திருமணம் செய்து கொள்ளப்போகும் சேதியை அறிவித்தனர். ஒரு வருடத்தில் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணம், அவர் காதலித்த இர்மா எக்ளர் ஒரு யூதர்.

ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தளர்ந்துவிடவில்லை. காதலுக்காக கட்சியைப் புறக்கணித்தார். திருமணத்துக்கான வேலைகளை தொடர்ந்தனர் இருவரும். ஆனால் அவர்களின் திருமணத்துக்கான விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றது. காரணம், புதிதாக கொண்டு வரப்பட்டிருந்த குடியுரிமைச் சட்டம்.


1935ஆம் ஆண்டில் இரண்டு முக்கியமான சட்டங்கள் ஜெர்மனியின் Nuremberg நகரத்தில் நடந்த நாஜி கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. இரு சட்டங்களும் பொதுவாக Nuremberg சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

முதல் சட்டம் Law of Protection of German Blood and Honor. ஜெர்மன் ரத்தத்தையும் மரியாதையையும் காப்பதற்கான சட்டம் என மொழிபெயர்க்கலாம்.

யூதர்களுடன் எந்தவித உறவுகளையும் ஜெர்மானியர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டம், முன்னமே யூதர்களை திருமணம் செய்திருந்தவர்கள் விவாகரத்து செய்வதற்கு மிக சுலபமான வழிகளையும் கொண்டிருந்தது.

ஹிட்லரின் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அவனது அருவருப்பான பிற்போக்கு கனவுக்கு உயிரூட்டும் சட்டம், Nuremberg நகரத்தில் கொண்டு வந்த இரண்டாம் சட்டம்தான்.

Reich Citizenship Law. குடியுரிமைச் சட்டம்!

குடியுரிமைச் சட்டம் குடிமக்களை கணக்கெடுக்கவில்லை. யாரெல்லாம் குடிமக்கள் இல்லை எனக் கணக்கெடுத்தது.

ஜெர்மானியர்களை பற்றிக் குடியுரிமைச் சட்டம் பேசவே இல்லை. முழுக்க முழுக்க யூதர்களை பற்றித்தான் சட்டம் பேசியது. அதிலும் உச்சம் என்னவென்றால், யாரெல்லாம் யூதர்கள் என்பதை அரசு நிர்ணயித்தது. யூதர்களை அடையாளம் கண்டு பின் என்ன செய்யும் அரசு?

குடியுரிமையை பறித்துவிட்டு பிறகு என்ன செய்யும் அரசு?

மரண முகாம்களை கட்டும்.

யூத மதத்திலிருந்து விலகி கிறித்துவ மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களை யூதர்கள் என்றே கூறியது குடியுரிமைச் சட்டம். அச்சட்டத்தைப் பொறுத்தவரை மூன்று வகை யூதர்கள் இருக்கிறார்கள்.

முதலில் உள்ளவர்கள் முழு யூதர்கள். மூன்று தலைமுறை யூத முன்னோர்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் முழு யூதர்கள்.

இரண்டாவது, அரை யூதர்கள். இரண்டு தலைமுறை யூதர்களாக இருந்து யூத மதத்தைப் பின்பற்றாமலும் யூத கணவனோ மனைவியோ இல்லாமல் இருந்தாலும் அவர்கள் அரை யூதர்கள்.

மூன்றாவது, கால்வாசி யூதர்கள். தாத்தா, பாட்டி மட்டும் யூதர்களாக இருந்து இந்த தலைமுறையினர் யூத மதத்தை பின்பற்றவில்லை எனில், அவர்கள் கால்வாசி யூதர்கள்.

இத்தனை நவீன காலத்திலும் கூட நம் எவரின் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ் இல்லை என்கிற சூழலில், 1935ஆம் ஆண்டை கற்பனை செய்து பாருங்கள்.

ஜெர்மனியின் குடிமகனாக ஜெர்மானியன்தான் இருக்க முடியுமென சொல்லும் சட்டம், அந்த ஜெர்மானியனும் அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளும்வரைதான் குடிமகன் என முக்கிய குறிப்பையும் உள்ளடக்கியிருந்தது. அதாவது அரசு எந்த ஜெர்மானியன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் அவனது குடியுரிமையை ரத்து செய்துவிட முடியும்.

யூதரை ஜெர்மானியர் திருமணம் செய்யக் கூடாது என்கிற சட்டத்தால், ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் திருமணம் நிராகரிக்கப்பட்டது. இருவரின் காதலும் தெரிந்ததும் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் ஆகஸ்ட் மனம் தளரவில்லை. இர்மா எக்ளருடன் இணைந்தே வாழ்ந்தார். தம்பதிகளுக்கு இங்கிரிட் என்கிற பெண் குழந்தையும் பிறந்தது, நிகழப்போகும் அவலங்கள் ஏதும் தெரியாமல்.

இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் இந்தப் புகைப்படத் தருணம் நேர்ந்தது. தான் விரும்பிய பெண்ணை மணம் முடிக்க முடியாமல் தடுத்தும் எதிர்கால வாழ்வின் மீது மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கும் ஒருவன் வந்து உங்களின் முன்னால் நிற்கும்போது அவனுக்கு வணக்கம் செலுத்த உங்களால் எப்படி கையை உயர்த்த முடியும்?

1937ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மனியிலிருந்து ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தப்பிக்க முயன்றார். தோற்று பிடிபட்டார். ‘ஜெர்மானிய இனத்தை களங்கப்படுத்தும் நடத்தை’யின் பெயரில் கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்தில் விடுதலை செய்யப்பட்டாலும் இர்மாவுடன் தொடர்பு இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டே வெளியே அனுப்பப்பட்டார்.

மறுபக்கத்தில் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் மனைவியும் குழந்தைகளும் யூதர்களுக்கென ஹிட்லர் கட்டிய மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தனக்கிடப்பட்ட உத்தரவை பொருட்படுத்தாமல் ஆகஸ்ட் இர்மாவை பார்க்க முயன்றபோது மீண்டும் கைதானார். இந்த முறை வெளிவரவே முடியாத ஒரு மரண முகாமுக்குள் அடைக்கப்பட்டார்.

இறுதிவரை ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க முடியவேயில்லை.

ஹிட்லரை அவமதித்து கைகட்டி ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் நின்றிருக்கும் புகைப்படத்துக்குப் பின் இருக்கும் கதை இதுதான். ஒரு ஜெர்மானியரும் ஓர் யூதரும் ஹிட்லர் கட்டிய மரண முகாம்களால் உயிர் பறிக்கப்பட்ட கதை!

Also Read: ஜப்பானியர்களை போல நீங்களும் Hikikomori தான் : எப்படி தெரியுமா?