உலகம்

முடிவுக்கு வராத கொரோனா; சீனாவில் இருந்து பரவுகிறதா புதிய ரக வைரஸ்? - உலக நாடுகள் பீதி!

சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே இன்னும் ஆட்டிப்படைத்து வருகிறது. உலகமே இந்த தொற்றை வீழ்த்த முடியாமல் தவித்து வரும் நிலையில், சீனாவில் குரங்கு பி வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவர் விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்துள்ளார்.

பின்னர்,சில வாரங்கள் கழித்து இவருக்குக் குமட்டல் மற்றும் வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பிறகு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையிலிருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த மே 27ம் தேதியன்று கால்நடை மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதால் இவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது அவரது உடலில் குரங்கு பி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இது குறித்து சீன மையத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "சீனாவில் குரங்கால் ஏற்பட்ட முதல் மனித நோய்த்தொற்று இதுவாகும். அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர். தற்போது முதல்முறையாகக் குரங்கு பி தொற்று மனிதருக்குப் பரவியுள்ளதால், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு பி வைரஸ் 1932ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி, மனிதர்களுக்கு அரிதாகவே இந்த நோய்த்தாக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த தொற்றால் இதுவரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த தொற்று மனிதர்களைத் தாக்கினால் அவர்களுக்குக் காய்ச்சல், சோர்வு, அரிப்பு, தசைவலி ஆகியவை இந்நோய் அறிகுறியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவிற்கு மத்தியில் சீனாவிலிருந்து அடுத்த வைரசாகக் குரங்கு பி தொற்று ஏற்பட்டு மருத்துவர் இறந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? OPEC நாடுகளின் புதிய முடிவு; என்ன செய்வார் மோடி?