உலகம்

மெக்சிகோவில் பயங்கரம் : போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே மோதல் - பொதுமக்கள் உட்பட 16 பேர் பலி!

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 9,904,963 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 496,866 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 11வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோவில் இதுவரை 208,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,779 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலிலும், மெக்ஸிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 2006ம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் எதிர்த்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போட்டியாளர்களைக் கொன்று குவிக்கும் வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மிக்கோகன் மாநிலத்தில் உருவாபன் என்ற நகரில் ஒரு பெரிய போதைக் கடத்தல் கும்பல், அதன் மற்றொரு தரப்பினரைக் கொன்று அவர்களில் 9 பேரின் சடலத்தை பாலத்தின் மீது தொங்கவிட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை சாலையோரம் குவித்து வைத்தனர்.

அதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 4 பேரை துண்டுதுண்டாக வெட்டி 119 பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களை தடுக்கச் சென்ற போலிஸாரையும் கும்பல் விட்டு வைப்பதில்லை.

சமீபத்தில் காரில் சென்ற 14 போலிஸ்காரர்களை கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து தற்போது மேற்கு மெக்ஸிகன் மாநிலமான சினலோவாவில் நேற்று 2 போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

வீதிகளில் வளம் வந்த இந்த கும்பல் பொதுமக்களையும் தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலியான 16 பேரில் 7 பேர் பொதுமக்கள் என்றும் 2 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.