உலகம்

“உலக அளவில் 2ம் இடம் - பலி எண்ணிக்கையை மக்களிடம் இருந்து மறைக்கும் பிரேசில் அரசு” : மக்கள் ஆதங்கம்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,086,003 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 4,06,107 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,007,449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 112,469 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

பிரேசில் கொரோனா தொற்றால் 691,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,312 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்க பிரேசில் அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அரசு கொரோனா வைரஸ் தொடர்பான தரவு, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகளை வெளியிட்டு வந்த இணையதளங்களை முடக்கி தரவுகளை மறைக்கத் தொடங்கியுள்ளது. அதேப்போல் உறுதி செய்யப்பட்ட தரவு எண்ணிக்கையும் மறைக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே தொற்றுக் குறித்து எந்த வித கவலையும் இல்லாமால் இருந்ததாக பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ இருந்ததாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ செய்தியாளர்கள் சந்தித்தின்போது, “உயிரிழப்பு நிகழ்கிறது. அதனால் என்ன? நான் என்ன செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்?” என பொறுப்பற்ற வகையில் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், covid.saude.gov.br இணையதளத்திலிருந்து தரவுகள் நீக்கப்பட்டதற்கு அந்த நாட்டு சுகாதார அமைச்சகமும், அதிபர் போல்சனாரோவும் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை என சுகாதாரத்துறை வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

கொரோனா தொற்றை வெளிப்படைத் தன்மையுடன் அணுகினால் ஒழிய பாதிப்பை சரி செய்யமுடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Also Read: “அதிகரிக்கும் உயிர்பலி; ஒரே மாதத்தில் 2 அமைச்சர்கள் ராஜினாமா” : அதிபரால் நாசமாகும் பிரேசில்?