உலகம்

“ ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி” - உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் (46) என்பவரை கடந்த மே 25ம் தேதி மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ஃப்ளாய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்து, மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் முழுமையான பிரேத பரிசோதனை முடிவுகளை அவர் குடும்பத்தினர் சம்மதத்துடன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஃப்ளாய்ட் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், அவரது தோள்பட்டை, முகம் உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்தியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொற்று அவருடைய உடலில் நீடித்திருந்தது. ஆனால், அவருடைய இறப்புக்கு கொரோனா எந்த விதத்திலும் காரணமாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘மிலிட்டரியை இறக்குவேன்’ என்ற ட்ரம்ப்... பதிலளிக்கத் திணறிய கனடா பிரதமர் ட்ரூடோ - சர்ச்சை வீடியோ!