உலகம்

‘மிலிட்டரியை இறக்குவேன்’ என்ற ட்ரம்ப்... பதிலளிக்கத் திணறிய கனடா பிரதமர் ட்ரூடோ - சர்ச்சை வீடியோ!

கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தை நெரித்து, அமெரிக்க போலிஸ் கொலை செய்த சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, தொடர்ந்து கருப்பின மக்களுக்கு எதிரான நிற மற்றும் இனவெறியை எதிர்த்து அமெரிக்கர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை ஒடுக்க போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடந்த மக்கள் நூற்றுக்கணக்கில் வீதிகளில் குவிந்து ட்ரம்ப் அரசுக்கு எதிராகவும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் போன்ற கருப்பினத்தவர்களுக்கு நீதி வேண்டியும் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால் ராணுவத்தை இறக்க நேரிடும் என்று எச்சரித்த அதிபர் ட்ரம்ப், அதிகாரத்தை செயல்படுத்துங்கள் என ஆளுநர்கள் மற்றும் போலிஸாருக்கு அறிவுறுத்தினார். ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு உலக அளவில் பரவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, நிறவெறிக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வரும் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், அமெரிக்காவின் நிலை குறித்தும், ராணுவத்தை இறக்குவேன் என்று ட்ரம்ப் பேசியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது, சரியாக 21 நொடிகளுக்கு மவுனம் காத்த பிரதமர் ட்ரூடோ, அமெரிக்காவின் நடக்கும் பிரச்னைகளை உற்றுநோக்கி வருகிறோம். பல பத்தாண்டுகளாக அம்மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. இது மக்களை ஒன்றிணைப்பதற்கான நேரமாகும் என ட்ரம்பின் பெயரைக் கூட குறிப்பிடாமல் பேசியுள்ளார்.

மேலும், நம்மில் பலருக்குள்ளேயும் கண்ணுக்குத் தெரியாமல் பாகுபாடுகள் நிறைந்துள்ளது என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அதுதொடர்பாக காணொளிகள் இணையத்தில் பரவி பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

நிறவெறிக்கு எதிராக பல இடங்களில் ட்ரூடோ குரல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டாலும் இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எவ்வித விமர்சனமோ, கருத்தோ தெரிவிக்காததன் மூலம், அமெரிக்க அரசின் செயல்களை கனடா பிரதமர் ஆதரிக்கிறாரா என்ற ஐயப்பாடு உலகத் தலைவர்களிடையே எழுந்துள்ளது.

Also Read: நிறவெறிக்கு எதிராக பெரும் புரட்சிக்குத் தயாராகும் அமெரிக்கா : போராட்டக்காரர்களுடன் இணைந்து போலிஸ் !