உலகம்

“அதிகரிக்கும் உயிர்பலி; ஒரே மாதத்தில் 2 அமைச்சர்கள் ராஜினாமா” : அதிபரால் நாசமாகும் பிரேசில்?

உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. உலகின் வல்லரசு நாடு முதல் பல நாடுகளை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்தச் சூழலிலும் சில நாடுகள் பெரிய அளவில் உயிர் பலிகளை சந்தித்தபோதும் கூட கொரோனா விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தொற்றால் அதிக உயிர்பலி நிகழும் பிரேசிலில், அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கொரோனா விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸால் பிரேசிலில் இதுவரை 2,20,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கையும் 14,962 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,068 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 884 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா

இந்நிலையில், சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ செய்தியாளர்கள் சந்தித்தின்போது, “உயிரிழப்பு நிகழ்கிறது... அதனால் என்ன? நான் என்ன செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்?” என பொறுப்பற்ற வகையில் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அதிபரின் மோசமான நடவடிக்கைகளாலும், அழுத்தம் காரணமாகவும் இந்த நேரத்தில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டெய்ச் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒருமாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது அமைச்சர் நெல்சன் டெய்ச் ஆவார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை, தனது ஆலோசனைகளை அதிபர் பொல்சனாரோ கேட்பதில்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வந்தார். சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதிபரிக்கும் இடையே நடந்த மோதலால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லூயிஸ் ஹென்ரிக் தனது சுகாதாரத்துறை பதவியை ராஜினாமா செய்தார்.

நெல்சன் டெய்ச்

அதன்பிறகுதான் நெல்சன் டெய்ச் பதிவியேற்றார். பதவி ஏற்று ஒருமாதமே ஆன நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நெல்சன். இதுதொடர்பாக பேசிய நெல்சன் டெய்ச், “இதுபோன்ற கடினமான காலக்கட்டத்தில் அமைச்சராக பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல; தவறுகளை மறைக்க அழுத்தங்கள் கொடுக்கப்படுக்கிறது” என்று கூறிவிட்டு எதனால் பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறாமல் சென்றுவிட்டார்.

நெல்சனின் நடவடிக்கைக்கு அதிபர் முழு ஒத்துழைப்பு வழங்காததும், சரியான தலைமை இல்லாததுமே இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததற்கு காரணம் என உள்ளூர் பத்திரிக்கைகள் விமர்சித்து வருகின்றன.

Also Read: “உயிரிழப்பு நிகழ்கிறது அதனால் என்ன?; நான் என்ன செய்யவேண்டும்?”: பொறுப்பற்ற வகையில் பேசிய பிரேசில் அதிபர்!