உலகம்

அமெரிக்காவில் கியூப தூதரகத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - ட்ரம்ப் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 210 நாடுகளில் பரவியுள்ள வைரஸ் கம்யூனிச நாடான வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் ஒரு தொற்று பாதிப்பு இல்லாமல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோசலிச கியூபா கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கின்றது. குறிப்பாக, கியூபாவின் மருத்துவக் குழுக்கள் தற்போது ஐரோப்பா நெடுகிலும், லத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் உள்ள 59 நாடுகளில் தனது மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கியூபத் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூரகத்தின் மீது கடந்த 30ம் தேதி இரவு மர்ம நபர் துப்பாக்கியால் தாக்குதல் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான தகவலை கியூபா தூதரக அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 30ம் தேதி இரவு அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென தூதரகத்தின்மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். கியூபா தூதரகத்தில் கியூபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததன் காரணமாக, இதில் தூதரகத்தைச் சேர்ந்த எவருக்கும் காயம் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கூறுகையில், “இந்த தாக்குதலை அரசின் சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம். தூதரகத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது, அந்தத் தூதரகம் அமைந்துள்ள நாட்டின் பொறுப்பாகும் என்று வியன்னா கன்வென்ஷன் ஆணை பிறப்பித்திருக்கிறது.

இங்கே இது அமெரிக்காவின் பொறுப்பாகும். எனவே, அமெரிக்க அரசாங்கம், கியூபத் தூதரகம் மீது தாக்குதல் தொடுத்த நபர்கள் மற்றும் குழுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் அமெரிக்காவின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அதாவது, அமெரிக்கா, கியூபத் தூதரகத்திற்குப் பாதுகாப்பு அளித்திடத் தவறியிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் இதுவரையிலும் கியூப தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிகாரப் பூர்வமாக அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமைச்சர் மைக் போம்பியோ ஆகியோரின் கியூபாவிற்கு விரோதமான பேச்சுக்கள்தான் இத்தகைய தாக்குதலுக்குக் காரணமாகும் என ஜனநாயக அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: கொரோனாவால் கலங்கிய இத்தாலிக்கு மருத்துவக் குழுவை அனுப்பி மனிதநேயத்தை உலகிற்கு உணர்த்தியுள்ள கியூபா!