உலகம்

வூஹான் நகரில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்... படிப்படியாக ஊரடங்கை விலக்கும் சீனா! #Covid19

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை வதைத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் 82 ஆயிரம் பாதிக்கப்பட்டு, 4,633 பேர் உயிரிழந்தனர். சீன அரசின் வேகமான செயல்பாடுகள் உயிரிழப்பும், கொரோனா தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் சீனா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் தலைநகராக விளங்கிய வூஹான் நகரில், கடந்த சில வாரங்களாக, புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்து நேற்று காலை வீடு திரும்பினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வூஹானில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என சீனா அறிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் கொரோனா விவகாரத்தில், சீனா பொய் சொல்கிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: “கொரோனா நெருக்கடியிலும் ரேபிட் கிட் கொள்முதலில் முறைகேடு” - அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!