உலகம்

“எதுக்கு நோபல் பரிசு கொடுத்தாங்கனு ஒபாமாவுக்கே தெரியாது; எனக்கு கொடுத்து இருக்கலாம்” - ட்ரம்ப் பேச்சு !

நியூயார்க் நகரில் ஐ.நா பொதுசபை கூட்டம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்றுள்ளார். இந்நிலையில், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டு பேசியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ட்ரம்ப்பும், இம்ரான் கானும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் “நீங்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ட்ரம்ப், “நோபல் பரிசு நியாயமாக வழங்கப்பட்டால் பல விஷயங்களுக்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். அதனால்தான் ஒபாமா ஜனாதிபதியான சில மாதங்களிலேயே அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்.

எதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என ஒபாமாவுக்கே தெரியாது. எதற்காக நோபல் பரிசு என்றே தெரியாத விஷயத்தில் மட்டும் எனக்கும் ஒபாமாவுக்கும் பொருத்தம் உள்ளது” என கிண்டலாக கூறினார்.